ஜம்முவில் திக்விஜய் சிங் பேச்சால் சர்ச்சை சர்ஜிக்கல் தாக்குதலுக்கு ஆதாரமில்லை: பாஜ கடும் கண்டனம்

ஜம்மு: ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதற்கு ஒன்றிய பாஜ அரசு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. வெறும் பொய் மூட்டையைக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள்’ என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பேசியது சர்ச்சையாகி உள்ளது. ஜம்முவில் ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘‘கடந்த 2019ம் ஆண்டு,ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு வீரர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லும் சிஆர்பிஎப்பின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.

அவர்கள் சாலை வழியாக சென்ற போது, புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு நுழைந்து வான்வழியாக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதாக ஒன்றிய பாஜ அரசு கூறுகிறது. அதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் பொய் மூட்டையைக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள்’’ என்றார். இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்தது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், ‘‘ காங்கிரசார் ராணுவத்தை அவமதிக்கிறார்கள்.   

ராகுல் நடத்துவது  இந்தியாவை உடைக்கும் பயணம் என்பது தெரிகிறது’’ என்றார். அதைத் தொடர்ந்து திக்விஜய் சிங் தனது டிவிட்டரில் வெளியிட்ட வீடியோ செய்தியில், ‘‘புல்வாமா தாக்குதலின் போது தீவிரவாதிகளுக்கு 3 குவிண்டால் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு கிடைத்தது எப்படி? தீவிரவாதிகளுடன் தொடர்புடைய டிஎஸ்பி தேவிந்தர் சிங் எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு அரசால் பதில் தர முடியவில்லை. அவர் ஏன் விடுவிக்கப்பட்டார்? அவர் மீது ஏன் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்படவில்லை?’ என கேள்விகளை எழுப்பி உள்ளார்.

* தனிப்பட்ட கருத்து

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘‘திக்விஜய் சிங் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து, அது காங்கிரசின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை. 2014ம் ஆண்டுக்கு முன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் சர்ஜிக்கல் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. தேசிய நலனுக்கான அனைத்து ராணுவ நடவடிக்கையும் காங்கிரஸ் தொடர்ந்து ஆதரிக்கும்’’ என்றார்.

Related Stories: