பாதுகாப்பு நிலைமை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை: சீன எல்லையில் ராணுவ தளபதி நேரில் ஆய்வு

புதுடெல்லி: அருணாச்சலில் இந்திய-சீன வீரர்களுக்கு வீரர்களுக்கு இடையே மோதல் நடந்த சூழ்நிலையில் சீன எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே நேரில் ஆய்வு செய்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டாரில் எல்லை கோட்டை ஒட்டிய இடத்தில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே மோதல்  ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.  கடந்த சனிக்கிழமையன்று  ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே கொல்கத்தாவில் உள்ள கிழக்கு பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கு அருணாச்சல் பிரதேசம், சிக்கிமில் உள்ள எல்லை கோடு பகுதிகளில் ராணுவத்தின் தயார் நிலை, பாதுகாப்பு சூழல் குறித்து விரிவாக ஆய்வு நடத்தினார். கடந்த 12ம் தேதி ராணுவ தளபதி பாண்டே கூறுகையில்,‘‘  சீனா எல்லையில் தற்போது நிலைமை சீராக உள்ளது, ஆனால் அது கணிக்க முடியாததாக உள்ளது.எனினும், எந்த ஒரு சூழ்நிலையையும் சந்திக்க இந்திய வீரர்கள் போதுமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார். இந்த சூழ்நிலையில்,ராணுவ தளபதி மனோஜ் பாண்டே சீன எல்லையில் தவாங் பகுதிக்கு நேற்றுமுன்தினம் சென்று  ராணுவத்தின் தயார் நிலை குறித்தும், பாதுகாப்பு நிலவரம் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில்,‘‘ இந்த சுற்றுபயணத்தின்போது சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்தி வீரர்களை பாராட்டிய ராணுவத்தளபதி இதே   வீரத்துடன் செயல்படுமாறு வீரர்களை ஊக்கப்படுத்தினார். எல்லைகோட்டில் உள்ள பகுதிகள் மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்’’ என்றனர்.

Related Stories: