இலங்கைக்கு கடத்தலை தடுக்க கடலோர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தொண்டி : இலங்கைக்கு பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க கடலோர ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருள்கள் முதல் அனைத்து பொருள்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. அங்குள்ள மக்கள் நிலமையை சமாளிக்க முடியாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக வர ஆரம்பித்துள்ளனர். கடந்த சில வருடங்ளுக்கு முன்பு வரையிலும் இலங்கை செல்வ செழிப்பில் சீமாட்டியாய் திகழ்ந்த நாடு. விடுதலை புலிகளின் போர், கொரோனா பெருந்தொற்று என அடுத்தடுத்த நிகழ்வுகள் நாட்டை அழிவு பாதைக்கு அழைத்து சென்று விட்டது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருந்தது தேயிலை உற்பத்தி, சுற்றுலாத் துறை, உலகம் முழுவதும் இலங்கையின் தேயிலைக்கு தனி மவுசு இருந்தது. இதனால் அதிகளவில் தேயிலை ஏற்றுமதியும் நடைபெற்றது. அடுத்ததாக சுற்றுலா தளம் உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதற்கு விமான சேவை உள்ள நாடாக இலங்கை இருந்தது.

தமிழகத்திற்கும் இலங்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இங்கிருந்து கைலி உள்ளிட்ட ஆடைகள் கொன்டு சென்று அங்கிருந்து தைலம், சோப்பு, தேயிலை கொண்டு வந்துள்ளனர். தொண்டி, நம்புதாளை பகுதியில் உள்ள பெரும்பான்மையான பணக்காரர்கள் இலங்கையுடன் உறவு தொடர்பில் இன்றும் உள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உலகையே ஆட்டி படைத்த கொரோனா பெரும் தொற்று இலங்கையை புரட்டி போட்டது. கொரோனா காரணமாக இலங்கையின் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் வரவு முற்றிலும் தடை செய்யப்பட்டது. மேலும் ஏற்றுமதியும் நிறுத்தப் பட்டது. வருமானத்திற்கு வழி வகுத்த இரண்டு முக்கிய வழிகள் அடைக்கப்பட்டதால் இலங்கை மெல்ல சரிவை நோக்கி பயணித்தது. நாட்கள் செல்ல செல்ல நாடு பொருளாதார சீரழிவில் சிக்கியது. கையிருப்பு குறைந்தது கடன் சுமை கூடியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக கடல் பகுதியிலிருந்து அதிக அளவில் மஞ்சள் கடத்தப்பட்டதும் அங்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் மட்டுமே.

இன்று இலங்கையில் பெட்ரோல் முதல் காய்கறி வரையிலும் அனைத்து அத்தியாவசிய பொருள்களும் கட்டுக்கடங்காத அதிக விலையில் விற்கப்படுகிறது. அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தட்டுப்பாடு ஒருபுறம் பொருளாதார சிக்கல் ஒரு புறம் என மக்கள் அல்லல் படுவதால் உயிர் பிழைத்தால் போதும் என இலங்கையை விட்டு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சட்டவிரோதமாக கள்ள படகில் வர ஆரம்பித்து விட்டனர். நூறுக்கும் மேற்பட்டோர் கைக்குழந்தைகளுடன் பசியும் பட்டினியுமாய் தமிழகத்திற்கு அகதியாக படகில் வந்தனர்.

இவ்வளவு கஷ்டத்திலும் போதை பொருள்கள் கடத்தல் தமிழக கடல் வழியாக இலங்கைக்கு அதிக அளவில் நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக அனைத்து பகுதியிலிருந்தும் கடத்தல் நடக்கிறது. மஞ்சள், தங்கம் தவிர்த்து போதை வஸ்துகளான கஞ்சா, அபின் உள்ளிட்ட அனைத்து வகை போதை பொருள்களும் கடத்தப்படுகிறது.

மண்டபம், தொண்டி,தேவிபட்டிணம் உள்ளிட்ட கடற்கரைகளில் அடிக்கடி அதிகளவு போதை பொருள் பிடிபடுகிறது. இலங்கையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு சுலபமாக கடத்தப்படுவதால் கடத்தல்காரர்கள் போதை பொருள்களை இலங்கைக்கு கொண்டு செல்வதிலேயே குறியாக உள்ளனர். விரைவாக சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் ராமேஸ்வரம்,தொண்டி உள்ளிட்ட கடல் பகுதியை நாடுகின்றனர்.

இரு தினங்களுக்கு முன்பு காலணிகள் கூட கடத்த தயாராக இருந்ததை போலீசார் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஆகையால் ரோந்து பணியல் கடலோர பகுதியில் தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: