போட்டி போட்டு அதிமுகவினர் காவடி தூக்குவது அழகல்ல: திருமாவளவன் கருத்து

பரமக்குடி: அதிமுகவினர் பாஜவுக்கு போட்டி போட்டு காவடி தூக்குவது அழகல்ல என்று தொல். திருமாவளவன் எம்.பி கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல்சேகரன் பேரவை மாநில பொதுச்செயலாளர் சந்திரபோஸ் நேற்று மாலை காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த விடுதலைச்சிறுத்தை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அளித்த பேட்டி: தமிழ்நாடு முழுவதும் இரட்டை குவளை முறை, இரட்டை சுடுகாடு முறை போன்ற சாதிய கொடுமைகள் தொடர்கின்றன. இவற்றை முழுமையாக கண்டறிவதற்கு விசாரணை ஆணையத்தை அரசே அமைக்க வேண்டும்.

2024 நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக ஆயத்த பணிகளில் பாஜ இறங்கியுள்ளது. அக்கட்சியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் சிதறி போகாமல் ஒன்றாக இணைய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார். மதுரை விமான நிலையத்தில் திருமாவளவன் எம்.பி கூறுகையில், ‘‘தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்.ரவி தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். குறிப்பாக, டெல்லி சென்று வந்ததிலிருந்து மாநில அரசிற்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு வேறு பொறுப்பு ஆளுநர் நியமிக்க இருப்பதாகவும் தகவல் வருகின்றது. பாஜவை ஆதரிப்பது என ஓபிஎஸ் முடிவு எடுத்துள்ளது.

பாஜகவிற்கே சாதகமாக அமையும். போட்டி போட்டுகொண்டு காவடி தூக்குவது அதிமுகவிற்கும், அதன் தொண்டர்களுக்கும் நல்லதல்ல. அதேபோல் பாஜ வளர்வது அதிமுகவிற்கு நல்லதல்ல. தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வெற்றிக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வெற்றிக்கு பாடுபடும்’’ என்றார்.

Related Stories: