ஆவின் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு போலி சிபிசிஐடி போலீஸ் 3 மணி நேரத்தில் கைது

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம், திருப்பனமூர் வெங்கட்ராயன்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்(43). ஆவின் அலுவலக செயல் மேற்பார்வையாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்த பின் வீட்டிற்கு பைக்கில் சென்றார். பாப்பாந்தாங்கல் கூட்ரோடு அருகே நள்ளிரவு 12 மணியளவில் திடீரென ஒரு வாலிபர் பைக்கை நிறுத்தி, ‘என் பெயர் மணிகண்டன். மோரணம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீசாக உள்ளேன். செல்போனில் சார்ஜ் இல்லை. உடனடியாக காவல்நிலையத்திற்கு அவசர தகவல் பரிமாற வேண்டும்.

உங்களது செல்போனை கொடுங்கள்’ என கேட்டு வாங்கி உள்ளார். அதில் பேசிக்கொண்டே சிறிது தூரம் நடந்து சென்றவர் அங்கு நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரில் ஏறி பறந்துவிட்டார். உடனே பைக்கில் ரமேஷ் விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. புகாரின்படி மோரணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன்(30) என்று தெரிய வந்தது. 3 மணி நேரத்தில் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஸ்கூட்டர் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

Related Stories: