காதலியை 35 துண்டுகளாக வெட்டிக் கொன்ற வழக்கு; 3,000 பக்க குற்றப்பத்திரிகை; 100 சாட்சிகள்: டெல்லி போலீஸ் தீவிர நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டிக் கொன்ற வழக்கில் 3,000 பக்க குற்றப்பத்திரிகையும், 100 பேரின் சாட்சிகளையும் போலீசார் பதிவு செய்து ஆவணங்களை தயாரித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அஃப்தாப் அமீன் பூனாவாலா (28),  ஷ்ரத்தா வாக்கர் (26) காதல் ஜோடி, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தனர்.  

மும்பையில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்த ஜோடி, அங்கேயே தனியாக வசித்து  வந்தனர். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால், கடந்த மே மாதம் ஷ்ரத்தாவை  அஃப்தாப் கொடூரமான முறையில் கொன்றுள்ளார். தனது மகளைக் காணவில்லை என  ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்  துறையினர். அஃப்தாபை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,  ஷ்ரத்தாவைக் கொடூரமாக கொன்று அவரது உடலை 35 பாகங்களாக வெட்டி பல்வேறு  இடங்களில் வீசியதாகவும், தலையை குளிர்பதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்து  வந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

அஃப்தாப்பை கைது செய்த போலீசார், டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் டெல்லி காவல் துறையினர், அஃப்தாப் அமீன் பூனாவாலா மீது 3,000 பக்க வரைவு குற்றப்பத்திரிகையைத் தயாரித்துள்ளனர். அதில், அவர் தனது காதலியான ஷ்ரத்தாவை கொன்று அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி நகர் முழுவதும் வீசியெறிந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனிப்படை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘3,000 பக்கத்தில் தயார் செய்யப்பட்ட வரைவு குற்றப்பத்திரிகையில், 100க்கும் மேற்பட்டோரின் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: