ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் என்ன செய்கிறார்கள், பார்ப்போம்: டிடிவி.தினகரன் பேச்சு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை அமமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற டிடிவி.தினகரன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என பேசினார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி.தினகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். இதில், அமமுகவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் டிடிவி.தினகரன் பேசியதாவது: எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக, தற்போது குண்டர்கள் மற்றும் டெண்டர் விடுபவர்களின் கைகளில் சிக்கி தவிக்கிறது. தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறப் போகிறது. இத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அங்கு தற்போது எடப்பாடியும் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே போட்டியிட போவதாக கூறுகின்றனர். இதனால் அவர்களுக்கு கட்சியின் சின்னமும் கிடைக்கப் போவதில்லை. கட்சி சின்னம் இல்லாததால், இருவரும் ரூ.2 ஆயிரம் நோட்டை சின்னமாக வைத்து நிற்க வேண்டும். இத்தேர்தலில் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம். இவ்வாறு டிடிவி.தினகரன் பேசினார்.

Related Stories: