முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை, கல்வித்திறன் அதிகரிப்பு: அமைச்சர் கீதாஜீவன் தகவல்

சேலம்: முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம், பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகையும், அவர்களின் கல்வித்திறனும் அதிகரித்துள்ளது என்று, சேலத்தில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன் கூறினார். தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், நேற்று காலை சேலம் வந்தார். சேலம் மணக்காடு மாநகராட்சி துவக்கப்பள்ளியில், முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டப்பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். அதில், சமையல் கூடம், உணவை அனுப்பி வைக்கும் வாகனத்தை பார்வையிட்டார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு பரிமாற வைத்திருந்த உணவு வகைகளை அமைச்சர் ருசி பார்த்தார். பின்னர், மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியை பரிமாறினார். ஆய்வை தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், முதல்வரின் உன்னதமான திட்டமாகும். சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்திருக்கிறேன். மிகவும் தரமாக உணவு சமைத்து, மாணவர்களுக்கு வழங்குகிறார்கள்.

உணவு கூடம், மாணவர்கள் சாப்பிடும் இடத்தில் ஷெட் அமைத்து, உட்கார்ந்து சாப்பிட டேபிள், சேர் நல்லமுறையில் வைத்துள்ளார்கள். இதேபோல், அனைத்து பள்ளிகளிலும் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் பள்ளிக்கு மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவர்களின் கல்வித்திறனும் மேம்பட்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

Related Stories: