குரல் குளோனிங்கை பயன்படுத்தி ஆள்மாறாட்ட மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் அறிவுரை

சென்னை: குரல் குளோனிங்கைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் இயக்குநர் சஞ்சய் குமார் அறிவுறுத்தியுள்ளார். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு நபரின் குரலை நகல் செய்வதன் மூலம் பெரிய நிதி மோசடிகள் செய்யப்படுகின்றன. இந்த மோசடியின் போது எந்த ஆதாரமும் கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விசாரணை கூட கடினமாக உள்ளது. ஏமாற்றப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதும் இயலாத செயலாக உள்ளது. இந்த மோசடி எவ்வாறு நிகழ்கிறது? பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்த குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் போல் காட்டிக் கொண்டு, மோசடி செய்பவரிடமிருந்து பாதிக்கப்பட்டவருக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது.

மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவருக்கு அவசர உணர்வு தூண்டுவதற்கு பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகிறார். உடனடி உதவி தேவைப்படும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகக் கூறி அழுது கொண்டே அல்லது கெஞ்சியோ மோசடி செய்வர். ஆள்மாறாட்டம் செய்யும் நபரின் குரலை குளோன் செய்ய அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருளைப் பயன்படுத்துகிறார். அதற்கு, ஆள்மாறாட்டம் செய்யப்படும் நபரின் குரல் மாதிரியை அவர்களின் சமூக ஊடகங்களில் பதிவிடும் விடியோக்கள் மூலம் பெறுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், சைபர் குற்றங்களைச் செய்வதற்கு AI குரல் குளோனை உருவாக்கி பயன்படுத்துகிறது.

அவர்கள் அவசர உணர்வு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தியவுடன், மோசடிசெய்பவர் பாதிக்கப்பட்டவரை உடனடியாக பணத்தை மாற்றுமாறு கோருகிறார் பரிவர்த்தனையை விரைவுபடுத்த யுபிஐ போன்ற வேகமான மற்றும் வசதியான கட்டண முறைகளைப் பயன்படுத்துமாறு அவர் பரிந்துரைக்கின்றார். அக்கறையாலும், நேசிப்பவருக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வத்தாலும் பாதிக்கப்பட்டவர் அழைப்பாளரின் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் மோசடி செய்பவரின் கோரிக்கைகளுக்கு இணங்குகிறார். பணப்பரிமாற்றம் முடிந்த பிறகு, பாதிக்கப்பட்டவர் தங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரை தொடர்பு கொள்ள முயலும் போது தான் ஏமாற்றப்பட்டதை உணருகிறார்.

இதுபோன்ற மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சைபர் க்ரைம் கூடுதல் காவல்துறை இயக்குநர், சஞ்சய்குமார் கூறியதாவது: அழைக்கும் நபரின் அடையாளத்தை எப்போதும் சரிபார்க்க வேண்டும். ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த, அறியப்பட்ட/ சரிபார்க்கப்பட்ட எண்ணின் மூலம் அழைக்கப்படும் அழைப்பாளரை தொடர்புகொள்ள வேண்டும். குரல் குளோனிங் மோசடி உள்பட பொதுவான மோசடிகளைப் பற்றி தொடர்ந்து அறிந்திருங்கள். முக்கியமான உரையாடல்கள் அல்லது பரிவர்த்தனைகளில் ஈடுபடும் முன் அழைப்பாளர்களின் அடையாளத்தை சரிபார்க்க, வீடியோ அழைப்புகள் போன்ற பாதுகாப்பான தகவல் தொடர்பு சேவைகளைப் பயன்படுத்த வேண்டும். தெரியாத எண்களிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளைப் பெறும்போது எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் இதுபோன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர் க்ரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவுசெய்யலாம். இவ்வாறு தெரிவித்தார்.

The post குரல் குளோனிங்கை பயன்படுத்தி ஆள்மாறாட்ட மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: