சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரும் கட்டமைப்பு கல்லூரிகளை ஆராய்ந்து பார்த்து மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்: விஐடி இணை துணைவேந்தர் தியாகராஜன் அறிவுரை

சென்னை: சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் கட்டமைப்புகள் கல்லூரியில் உள்ளதா என்பதை ஆராந்து பார்த்து கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என விஐடி இணை துணைவேந்தர் தியாகராஜன் அறிவுறுத்தினார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தினகரன் நாளிதழ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சிக்கு ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர் வருகை தருகின்றனர். இந்த கண்காட்சி குறித்து சென்னை விஐடி கல்லூரியின் இணை துணைவேந்தர் தியாகராஜன் கூறியதாவது: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற சந்தேகம், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இருக்கும். அந்த சந்தேகங்களை தீர்க்க இந்த மாபெரும் கல்வி கண்காட்சி நடக்கிறது. கலை, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் என பல்வேறு துறைகள் இருக்கும்போது அதில் என்ன படிக்கலாம், எந்த கல்லூரியை தேர்வு செய்யலாம், அங்குள்ள வசதிகள் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை விஐடி கல்லூரியில் 20,000 மாணவர்கள், 1000க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர். 1000க்கு மேற்பட்ட நிறுவனங்கள், 400 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளன. 700க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வளாக நேர்காணலுக்கு வருகின்றன. கடந்த ஆண்டில் வேலைக்கு தேர்வான மாணவர்களின் சராசரி சம்பளம் ரூ.9 லட்சம், அதிகபட்ச சம்பளம் ரூ.53 லட்சம். மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள ஏதுவாக மாணவர் அமைப்புகள் உள்ளன. இதுபோன்ற கட்டமைப்புகள் உள்ள கல்லூரிகளில் சேர்ந்தால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பி.காம், பிபிஏ, கணிதம், அறிவியல், சட்டம் ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளும், 15க்கும் மேற்பட்ட பொறியியல் பட்டப்படிப்புகளும், 14 முதுகலை பொறியியல் பட்டப்படிப்புகள் உள்ளன. ஒரு கல்லூரியின் விளம்பரத்தை பார்த்து மட்டும் கல்லூரிகளில் சேரக்கூடாது.

கல்லூரிகளின் ஆசிரியர்களின் தகுதி, அவர்களின் திறன், அவர்களின் அனுபவம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மேலும் கல்லூரிகளின் உள்ள ஆய்வங்களின் கட்டமைப்பு, அதில் உள்ள அதி நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்த பின்னரே கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். பாடத்திட்டத்தில் இருப்பதை மட்டும் கற்றுத்தரும் ஆய்வகங்களை விட, சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும், ஆராய்ச்சிகளுக்கு ஏற்ப, நிறுவனங்களுக்கு ஏற்ப ஆய்வகங்கள் இருக்கிறதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மாணவர்கள் முழுமையாக திறன் வாய்ந்தவர்களாக வெளியே வரும் வகையில் அமைப்புகள், திட்டங்கள், செயல்பாடுகள் கல்லூரிகளில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். படித்து முடித்த பின் வேலைவாய்ப்புக்கு ஏதுவாக, தொழில் முனைவோராக வளர வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து பார்த்த பின் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். அனைத்து தகவல்களும், ஆன்லைனில் கிடைத்தாலும் நேரில் வந்து பார்த்து பேசினால் தான் சில விஷயங்களுக்கு தெளிவான புரிதல் இருக்கும் அந்த வகையில் இந்த கல்வி கண்காட்சி அனைத்து மாணவர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரும் கட்டமைப்பு கல்லூரிகளை ஆராய்ந்து பார்த்து மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்: விஐடி இணை துணைவேந்தர் தியாகராஜன் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: