கொட்டும் மழையில் காஷ்மீரில் நடைப்பயணம்: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்..!

ஸ்ரீநகர்: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. இணைந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீரில் நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டில் தொடங்கிய பயணம் கேரளா, கர்நாடாகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து இன்று ஜம்மு-காஷ்மீருக்குள் நடைப்பயணம் மேற்கொள்கின்றனர். லகன்பூர் எல்லையில் ராகுல் காந்தியை ஏராளமானோர் வரவேற்றனர். இன்று காலை ஹட்லி மோர்க் என்ற இடத்தில் தொடங்கிய நடைப்பயணம், மோசமான வானிலையால் நடைபயணம் ஒரு மணி நேரம் தாமதமானது. பிறகு நடைபயணம் தொடங்கியதுமே மழை பெய்தது.

இருப்பினும் நிறுத்தாமல் தொடர்ந்து நடைபயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். ராகுல் காந்திக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒற்றுமை நடைப்பயணத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்; ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் சிவ சேனா கட்சியின் சஞ்சய் ராவத், தேசிய மாநாடு கட்சியின் பரூக் அப்துல்லா, அசோக் கெலாட் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் யாத்திரை செல்லும் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் பதாகைகள், மாலைகளை ஏந்தியவாறு ராகுல்காந்தியை வரவேற்க காத்திருந்தனர்.

Related Stories: