மண்டலம் வாரியாக தண்ணீர் திறப்பு எதிரொலி; வேகமாக குறையும் அமராவதி திருமூர்த்தி அணை நீர்மட்டம்: கடந்த ஆண்டை விட 8 அடி குறைவு

உடுமலை: தொடர்ந்து மண்டலம் வாரியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் உடுமலை அருகே உள்ள அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைய துவங்கியுள்ளது. கடந்த ஆண்டுடன் நீர் மட்டத்தை ஒப்பிடும்போது தற்போது சுமார் 8 அடி குறைவாக உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை  90 அடி உயரம் கொண்டது. அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். இதேபோல கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமப்பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும்.

கடந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்ததால் அணை நிரம்பி பலமுறை உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. அணையில் 4.04 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். டிசம்பரில் 3.99 டிஎம்சிக்கு நீர் இருந்தது‌. அணையின் நீர் மட்டம் 89 அடியாக இருந்தது. இந்நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைய துவங்கி உள்ளது. நேற்று (19ம் தேதி) அமராவதி அணையின் நீர்மட்டம் 80.94 அடியாக குறைந்தது. அணைக்கு 108 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது.

909 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த ஆண்டு இதேநாளில் அணையின் நீர்மட்டம் 86.45 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல, உடுமலை அருகே 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. பிஏபி தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும். இதன்மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இதுதவிர, உடுமலை நகருக்கும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் அணை மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக, கான்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.

இதுதவிர, திருமூர்த்தி மலையில் குருமலையாறு, குழிப்பட்டி பகுதிகளில் பெய்யும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து பஞ்சலிங்க அருவி வழியாக அணைக்கு வந்து சேர்கிறது. அணை நீர்மட்டம் 55 அடிக்கு மேல் இருந்த நிலையில், தொடர்ந்து மண்டலம் வாரியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதற்கிடையில் நேற்று நீர்மட்டம் 45.41 அடியாக குறைந்தது. அணைக்கு 818 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. 902 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் 52.72 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுடன் நீர் மட்டத்தை ஒப்பிடும்போது தற்போது சுமார் 8 அடி குறைவாக உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடுப்பணைகள் பராமரிக்கப்படுமா?

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் சார்பில், நீர் வழித்தடங்களில் ஏராளமான தடுப்பணைகள் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. ஆனால் தடுப்பணைகளை உரிய முறையில் பராமரிக்காததால் அவை சேதமடைந்து, பயனற்றதாகி வருகின்றன. குறிப்பாக, தடுப்பணை பகுதியில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை வெட்டி அகற்றாததால் காடு போல் வளர்ந்து பரவிக்கிடக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் சென்று சேதத்தை ஏற்படுத்துகின்றன. குடியிருப்புகளுக்கு உள்ளும் முட்புதர்கள் பரவி விடுகின்றன. எனவே, தடுப்பணைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: