டிராவை நோக்கி சென்னை டெஸ்ட் முதல் வெற்றி முனைப்பில் தமிழ்நாடு: கடைசி நாளில் சாதிக்குமா?

சென்னை: அசாம் அணியுடனான ரஞ்சி கோப்பை லீக் போட்டியின் கடைசி நாளான இன்று, தமிழ் நாடு நடப்பு சீசனின் முதல் வெற்றியை வசப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ் நாடு அணி இதுவரை  5 லீக் ஆட்டங்களில் விளையாடி 4 டிரா, ஒரு தோல்வியுடன் வெறும் 8 புள்ளிகளுடன் பி பிரிவு புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. காலிறுதி  வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட நிலையில், அசாம் அணிக்கு எதிராக 6வது லீக் ஆட்டத்தை சென்னையில்  விளையாடி வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த தமிழ் நாடு முதல் இன்னிங்சில் 540 ரன் குவித்தது. ஜெகதீசன் 125, இந்திரஜித் 77, பிரதோஷ் 153, விஜய் ஷங்கர் 112 ரன் விளாசினர். தொடர்ந்து விளையாடிய அசாம் அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 120 ரன் எடுத்திருந்தது. களத்தில் இருந்த கேப்டன் கோகுல் சர்மா 18, அபிஷேக் தாகூரி 17 ரன்னுடன் 3வது நாளான நேற்று, முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். இருவரும் முறையே 31, 36 ரன்னில்  வெளியேறினர்.

அதன் பிறகு வந்தவர்கள் அடுத்தடுத்து  ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் உறுதியுடன் விளையாடிய  ஸ்வரூபம் புர்கயஷ்தா 74 ரன் எடுத்து ஆட்டமிழக்க, அசாம் முதல் இன்னிங்சில் 266 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (100.2 ஓவர்). தமிழ் நாடு தரப்பில் அஜித் ராம் 4, சாய் கிஷோர் 3 விக்கெட் அள்ளினர். சந்தீப் வாரியர், திரிலோக் நாக் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, தமிழ் நாடு அணி ‘ஃபாலோ ஆன்’ வழங்கியதால் 274 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அசாம் அணி 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன் எடுத்துள்ளது (34 ஓவர்). கை வசம் 10 விக்கெட் இருக்க, கடைசி நாளான இன்று இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 208 ரன் தேவை என்ற நிலையில் அசாம் 2வது இன்னிங்சை தொடர்கிறது. உள்ளூர் மைதானத்திலாவது நடப்பு சீசனின் முதல் வெற்றியை தமிழ் நாடு வசப்படுத்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மும்பை திணறல்: அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லியுடன் நடக்கும் லீக் ஆட்டத்தில், மும்பை அணி 2வது இன்னிங்சில் சொதப்பலாக விளையாடி தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. முதல் இன்னிங்சில் மும்பை 293 ரன் எடுத்த நிலையில், டெல்லி 369 ரன் குவித்தது. 76 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய மும்பை, 3ம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ரகானே 51, முலானி 30 எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். தணுஷ்கோடியன் 48* ரன், ராய்ஸ்டன் டயஸ் (0) களத்தில் உள்ளனர். கை வசம் 1 விக்கெட் இருக்க, மும்பை 92 ரன் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதால் கடைசி நாளில் டெல்லி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Related Stories: