தங்கசாலை மேம்பாலம் அருகே ரூ.4.5 கோடியில் தயாராகிறது மாநகராட்சி நவீன பூங்கா: சிறப்பு அம்சங்களுடன் பணிகள் மும்முரம்

தண்டையார்பேட்டை: சென்னை தங்கசாலை மேம்பாலம் அருகே ரூ.4.5 கோடியில் மாநகராட்சி நவீன பூங்கா அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சிறப்பு அம்சங்களுடன் கூடிய பூங்கா மியாவாக்கி காடுகள், மூலிகை செடிகளுடன் தயாராகிறது. ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி 5வது மண்டலம் தங்கசாலை மேம்பாலம் அருகே சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் நவீன பூங்கா ரூ.4.5 கோடி செலவில் 3.38 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், மூலிகைச் செடிகளுடன் அமைக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி வைத்தார்.

ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட இந்த  பூங்காவின் சிறப்பு அம்சங்கள் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் விதமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் மூலம் மியாவாக்கி காடுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் புங்கை, நீர்மருது, நாவல்‌, பூவரசு, பாதாம், மகிழம், கொடுக்கா புளி, மாங்கனி, ஈட்டி, வேங்கை, மூங்கில் உள்ளிட்ட நாட்டு மரங்கள், ஆவாரம், மதுரம், கரிசலாங்கண்ணி, முடக்கத்தான், வல்லாரை, நித்திய கல்யாணி, தூதுவளை, பிரண்டை, கற்பூரவள்ளி, மருதாணி, கற்றாழை, வெற்றிலை உள்ளிட்ட மூலிகை செடிகள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த பூங்கா 1.2 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. மேலும் சிறுவர்கள் விளையாட்டு திடல், யோகா கூடம், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், தியான மண்டபம் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் ரசிக்கும் வகையில் படகு உலகம், உருண்டை ஆகிய வடிவில் சிலைகள் அமைக்கப்படுகிறது. நடைபயிற்சி மேற்கொள்ள பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் எல்இடி விளக்குகள் பொருத்தப்படுகிறது. இப்படி பல்வேறு அம்சங்கள் பொருந்திய பூங்காவாக வடசென்னையில் அமைக்கப்படுகிறது.

மேலும், சிறுவர், முதியோர், பொதுமக்கள் சிறுநீர் கழிக்க கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. நடைபயிற்சி செய்பவர்கள் அமர்வதற்கு கான்கிரீட் மூலம் சிமென்ட் கற்கள் அமைத்து இருக்கைகள் அமைக்கப்படுகிறது. தற்போது 80 சதவீதம் பணிகள்  முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது. தற்போது ராயபுரம், வண்ணாரப்பேட்டை, மண்ணடி, தங்க சாலை உள்ளிட்ட பகுதியில் உள்ளவர்கள் நடைபயிற்சி செல்வதற்கு மெரினா கடற்கரைக்கு செல்ல வேண்டியது உள்ளது. தற்போது இந்த பூங்கா திறக்கப்பட்டால் சுற்றுப்புற பகுதி மக்கள் நடைபயிற்சி செய்வதற்கு வெகு தூரம் செல்ல வேண்டியது இல்லை. இதனை பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: