அதிமுக மாஜி அமைச்சர்கள் அன்வர் ராஜா, நிலோபர் கபில் மீதான ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: வக்பு வாரிய கல்லூரி பேராசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில் அன்வர் ராஜா, நிலோபர் கபில் மீதான சிபிஐ விசாரணை செல்லும் அதற்கு எந்த தடையும் இல்லை என தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து முடித்து வைத்துள்ளது. வக்பு வாரியத்தின் கீழ் மதுரையில் இயங்கிவரும் கல்லூரியில் கடந்த 2017ம் ஆண்டு பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக மதுரையை சேர்ந்த சர்தார் பாஷா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில்,\\” கடந்த 2017ம் ஆண்டு வக்பு வாரிய கல்லூரியில் நியமிக்கப்பட்ட 30 பேராசிரியர்களிடம் ரூ.30 முதல் ரூ.35 லட்சம் வரையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு கொண்டு நியமித்துள்ளனர்.  

சுமார் ரூ.10கோடி வரையில் பெறப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் வக்பு வாரிய உறுப்பினர்கள், கல்லூரி நிர்வாகிகள் என அனைவரும் பங்கிட்டு கொண்டுள்ளனர்.  அன்வர் ராஜா மற்றும் நிலோபர் கபிலின் நிர்ப்பந்தத்தின்  அடிப்படையில் நியமனங்கள் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் கல்லூரி செயலாளர் ஜமால் மைதீன், வக்பு வாரிய உறுப்பினர்கள், கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலருக்கு தொடர்புள்ளது. அதனால் இதுதொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.  இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, புகார் மீது முகாந்திரம் இருப்பதாக தெரிகிறது எனக்கூறி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜமால் மொகைதீன் என்பவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.இப்போது, உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஏதேனும் தெரிவிக்கும் பட்சத்தில் அது அடுத்தக்கட்ட விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரவில்,\\”வக்பு வாரியம் தொடர்பான ஊழல் வழக்கில் சிபி.ஐ விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதால் உச்ச நீதிமன்றம் அதில் தலையிட விரும்பவில்லை. அதனால் இந்த விவகாரத்தில் சிபிஐயின் நடவடிக்கைக்கு எந்தவித தடையும் விதிக்க முடியாது. அது செல்லத்தக்க ஒன்றாகும் என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து நேற்று உத்தரவிட்டனர். மேலும் இது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் இந்த ஆணை பொருந்தும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த நிலோபர் கபில், அப்போதைய எம்பி அன்வர் ராஜா ஆகியோர் உட்பட அனைவரின் மீதான சி.பி.ஐ விசாரணைக்கு எந்த தடையும் கிடையாது என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: