உறை பனி தாக்கம் அதிகரிப்பு தேயிலை தோட்டம் பாதிப்பு அபாயம்-நீலகிரியில் மலைக்காய்கறி மிஞ்சுமா? அச்சத்தில் விவசாயிகள் பரிதவிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக உறை பனி பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தேயிலை செடிகள் மட்டுமின்றி மலைக்காய்கறி விவசாயமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்தில் பரிதவித்து வருகின்றனர்.ஆண்டு ேதாறும் நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் நீர் பனி விழத் துவங்கும். நவம்பர் மாதம் முதல் உறை பனி விழத் துவங்கும். பொதுவாக டிசம்பர் மாதம் இறுதி வாரம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனியின் தாக்கம் அதிகம் காணப்படும். இச்சமயங்களில் 5 டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்பநிலை செல்வது வழக்கம். சில தினங்கள் 0 டிகிரி செல்சியசுக்கு செல்லும்.

ஆனால், இம்முறை வடகிழக்கு பருவமழை மற்றும் புயலின் காரணமாக கடந்த நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களில் உறை பனியின் தாக்கம் மிகவும் குறைந்தே காணப்பட்டது. கடந்த மாதம் இறுதியிலேயே ஓரிரு நாட்கள் பனி விழுந்தது. இந்நிலையில், இம்மாதம் துவக்கம் முதல் நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நீடிக்கிறது. நாள் தோறும் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்யசிற்கு உள்ளேயே உள்ளது.

மழையால் தாமதம் ஏற்பட்டதால் இம்முறை பனியின் தாக்கம் தற்போது கடுமையாக உள்ளது. குறிப்பாக நீரோடைகள், அணைகள், ஆறுகள், குளங்களை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. பல இடங்களில் நாள் தோறும் 5 டிகிரி செல்சியசிற்கு குறைவாகவே வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கடந்த 10 நாட்களாக பனி பொழிவு அதிகரித்துள்ள நிலையில், தற்ேபாது தாழ்வாக உள்ள தேயிலை தோட்டங்களில் செடிகள் முற்றிலும் கருகியுள்ளன. குறிப்பாக அப்பர்பவானி, அவலாஞ்சி மற்றும் எமரால்டு போன்ற பகுதிகளில் சில நாட்கள் 0 டிகிரி செல்சியசிற்கு சென்றது. எமரால்டு, இத்தலார், எடக்காடு, லாரன்ஸ், அவலாஞ்சி போன்ற பகுதிகளில் உள்ள பல ஏக்கர் தேயிலை தோட்டங்கள் பனியால் கருகி காணப்படுகிறது. அதேபோல, இப்பகுதிகளில் உள்ள மலைக்காய்கறி தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பீட்ரூட் மற்றும் முட்டைகோஸ் போன்ற பயிர்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மூன்று நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் உறை பனி பொழிவு அதிகமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதற்கு ஏற்றாற் போல், தற்போது ஊட்டியில் உறை பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தொடர்ந்து ஓரிரு நாட்கள் இதே போன்ற பனி விழுந்தால், ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள், புற்கள், செடி கொடிகள் காய்ந்து போகும் அபாயம் நீடிக்கிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

ஊட்டியில் கடந்த 10  நாட்களாக பதிவாகியிருந்த வெப்பநிலை (டிகிரி செல்சியசில்) அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்சம் அளவு: 9ம் தேதி அதிகபட்சம்  - 23, குறைந்தபட்சம் - 5, 10ம் தேதி அதிகபட்சம் - 23, குறைந்தபட்சம் - 2, 11ம் தேதி அதிகபட்சம் - 23, குறைந்தபட்சம் - 4, 12ம் தேதி அதிகபட்சம் - 24, குறைந்தபட்சம் - 3, 13ம் தேதி அதிகபட்சம் - 23, குறைந்தபட்சம் - 2, 14ம் தேதி அதிகபட்சம் - 24, குறைந்தபட்சம் - 1, 15ம் தேதி அதிகபட்சம் - 23, குறைந்தபட்சம் - 2, 16ம் தேதி அதிகபட்சம் - 24, குறைந்தபட்சம் - 2, 17ம் தேதி அதிகபட்சம் - 24, குறைந்தபட்சம் - 1

Related Stories: