வேண்டியவர்களை அமர வைக்க நீதிபதிகள் நியமனத்தை அரசு தாமதப்படுத்துகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தங்களுக்கு வேண்டியவர்களை பதவியில் அமர வைக்க நீதிபதிகள் நியமனத்தை ஒன்றிய அரசு வேண்டும் என்றே தாமதப்படுத்துகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது: நீதித்துறையை முற்றிலுமாக கைப்பற்றும் முயற்சியில் அரசு களம் இறங்கி உள்ளது. கொலிஜியம் அமைப்பை மறுசீரமைக்க சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் பரிந்துரை நீதித்துறைக்கு அளிக்கப்பட்ட ஒரு  விஷ மாத்திரை. ஏனெனில் கொலிஜியம் பரிந்துரைகளை வேண்டுமென்றே பல மாதங்களாக நிறுத்தி வைக்கும் கொள்கையை  மோடி அரசு பின்பற்றுகிறது. இது நீதித்துறையைக் கைப்பற்றும் தீய நோக்கத்துடன் நடக்கும் தாக்குதல். பிரதமர், சட்ட அமைச்சர் ஆகியோர் வேண்டுமென்றே நீதித்துறையின் சுதந்திரத்தை உருக்குலைக்கிறார்கள். அவர்களின் அடிப்படையான, வெளிப்படையான நோக்கம் நீதித்துறையை கைப்பற்றுவதாகும். மோடி அரசின் சிந்தனைக்கு சாதகமானவர்கள், அவர்களின் கருத்தியல் எஜமானர்களால் நியமனம் செய்யப்பட்டவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறும் வரை நீதித்துறை நியமனங்கள் தாமதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: