மதுரை பாலமேடுமற்றும் திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மதுரை பாலமேடு, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி 3ம் இடத்தில் இருந்து வந்த பாலமேட்டைச் சேர்ந்த அரவிந்த் ராஜ்என்பவர் உயிரிழந்தார். அதேபோல திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்  அரவிந்த் என்பவரும் உயிரிழந்தார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (16.1.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த இரா.அரவிந்தராஜ் (வயது 24) த/பெ இராஜேந்திரன் என்பவரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டு பகுதி சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் கிராமம், கண்ணகோன்பட்டியை சேர்ந்த அரவிந்த் (வயது 25) த/பெ மாரிமுத்து என்பவரும் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனை உற்றேன்.

இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: