தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அனேக இடங்களில் 22-ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு கோடை மழை சற்று தாமதமாகவே பெய்யத்தொடங்கியது.

தாமதமாக பெய்தாலும், ஏதோ பருவ காலத்தில் பெய்யக்கூடிய மழை போல், தற்போது தமிழ்நாட்டில் பரவலாக மழை கொட்டி வருகிறது.கடந்த வாரத்தில் இயல்பைவிட 60 முதல் 80 சதவீதம் வரை கோடை மழை குறைந்திருந்த நிலையில், தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக அது தற்போது இயல்பைவிட 30 சதவீதம் குறைவு என்ற நிலைக்கு வந்துவிட்டது.

இந்த மழை மேலும் தொடரும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 22-ந் தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்யக்கூடும். நேற்று முன்தினம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருந்த அறிவிப்பில், 20-ந் தேதி நெல்லை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த ‘சிவப்பு’ எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாறாக அங்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல கனமழை பெய்யக்கூடிய இடங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையும், மிக கனமழை பெய்யும் இடங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: