குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட வேங்கைவயலில் தமிழக அரசின் சமூகநீதி கண்காணிப்பு குழு ஆய்வு..!!

புதுக்கோட்டை: குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை வேங்கைவயலில் தமிழக அரசின் சமூக நீதி கண்காணிப்பு குழு ஆய்வு செய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் சுமார் 30 தலித் குடும்பங்களின் குடியிருப்புகள் உள்ளது. இங்கு வசிக்கும் சிறார்களுக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறார்களை பரிசோதித்த மருத்துவர்கள் குடிநீரில் கலப்பு இருந்திருக்கலாம் என தெரிவித்தனர். இதையடுத்து, சந்தேகமடைந்த மக்கள், தங்கள் குடியிருப்புக்குள் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி பார்த்தபோது, மனிதக் கழிவு மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது யார்? என்று கண்டுபிடிப்பதற்காக திருச்சி டிஐஜி சரவண சுந்தரால் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழுவினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வேங்கை வயல் கிராமத்தில் சமூக நீதி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்யும் என்று தமிழக அரசு கூறியது. அதன்படி இன்று குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை வேங்கைவயலில் சமூக நீதி கண்காணிப்பு குழு ஆய்வு செய்து வருகிறது.

சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், ராஜேந்திரன், கருணாநிதி, சாந்தி ரவீந்திரநாத் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து சமூக நீதி கண்காணிப்பு குழுவினர் நடந்த கொடுமை குறித்து கேட்டறிகின்றனர். குற்றச்செயலில் ஈடுபட்டது யார்? என ஏற்கனவே 70 பேரிடம் காவல்துறை விசாரித்துள்ளது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த அவலம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த ஆய்வுக்கு பிறகு ஆட்சியருடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: