தலைமறைவு குற்றவாளிகள் விவரங்களை தாக்கல் செய்யாத 7 மாநில உள்துறை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன்

புதுடெல்லி: தலைமறைவு குற்றவாளிகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யாத 7 மாநில உள்துறை செயலாளர்கள் பிப்ரவரி 13ம் தேதி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் போது ஜாமீனில் சென்ற குற்றவாளி ஒருவர் தலைமறைவானார். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநிலங்களும் , மாவட்ட வாரியான வழக்கு விசாரணையின் போது தலை மறைவானவர்கள்,  தேடப்படும் மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ஜாமீன் மற்றும் பரோலில் வெளியே சென்று தலைமறைவான குற்றவாளிகளின் விவரங்களை சேமிக்கும் வகையில் ஒரு தேசிய அளவில் இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் ஏற்கனவே   உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமைனான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது  அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், மத்திய பிரதேசம், நாகலாந்து, கோவா, தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய 7 மாநிலங்கள் சார்பில் குற்றவாளிகள் தொடர்பான விவரங்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்தார். இந்த தகவல்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட 7 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச உள்துறை செயலாளர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் சம்பந்தப்பட்ட உள்துறை செயலாளர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: