தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 94வது வாரியக் கூட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின், 94வது வாரியக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்து உரையாற்றினார். தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 94வது வாரியக் கூட்டம் இன்று 12.1.2023 தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகை 5வது தளத்திலுள்ள கூட்டரங்கில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 94வது கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பித்த  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் / தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தலைவர் அவர்களையும், அனைத்து உறுப்பினர்களையும், துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வரவேற்று உரையாற்றினார்.

94வது கடல்சார் வாரியக் கூட்டத்தை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து தொடக்கவுரையில், தமிழ்நாடு முதலமைச்சர்  தளபதியார் அவர்களின் சீரிய முயற்சியால், தமிழ்நாடு தொழில் முனைவோருக்கான முன்னோடி மாநிலமாக உள்ளது என்றும், இதன் அடிப்படையில் தனியார் முதலீட்டு துறைமுகங்கள் அமைப்பதற்கு மிகவும் சாத்தியமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று தெரிவித்தார்கள். தமிழ்நாடு கடல்சார் வாரியம் 1076 கிலோமீட்டர் நீளக்கடற்கரை பகுதியில் சாத்தியமான இடங்களில் சுற்றுப்புறச்சூழல் மற்றும் மீன்பிடி வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் பல்வேறு சிறு துறைமுகங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்த அமைச்சர் அவர்கள், ஆழ்கடல் துறைமுகங்கள் அமைப்பதற்கு சாத்தியக் கூறுகளை ஆய்வு  செய்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு (இலங்கை) பயணிகள் படகு போக்குவரத்தை  துவங்குதல், கடற்கரைச் சார்ந்த நீர் விளையாட்டுகள் ஆகியவற்றினை உருவாக்குவதற்கான முயற்சிகளையும் ஆராய்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார்கள்.

ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தின்கீழ், கடலூர் துறைமுகத்தை மேம்படுத்தி 35 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போதுதான் அதை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விவேகானந்தர் பாறையில் தோணித்துறை நீட்டிப்பு, விவேகானந்தர் பாறை மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் தொங்கு பாலம் ஆகிய பணிகள் துவக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்கள். இராமேஸ்வரம் - தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவக்குதல், மிதக்கும் தோணித்துறைகள் அமைத்தல் ஆகியவற்றிற்கான கருத்துருக்கள் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு நிதியுதவி கோரப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு கூறினார்கள். 2021 - 2022 ஆம் ஆண்டில், தமிழ்நாடு கடல்சார் வாரியக் கட்டுப்பாட்டிலுள்ள சிறுதுறைமுகங்களில்,  67 இலட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்கள். தமிழ்நாடு கடல்சார் வாரியம் மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு, அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக் கொண்டார்கள். அமைச்சர் அவர்களின் தொடக்கவுரையை தொடர்ந்து வாரியக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்ட ஒவ்வொருப் பொருள் தொடர்பாக, விரிவாக விவாதிக்கப்பட்டது.

Related Stories: