திருவண்ணாமலையில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் ₹10 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் கூலிப்படை ஏவி டெய்லர் கொலை

*கைதான மாணவன் உட்பட 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், டெய்லரை வெட்டிக்கொலை செய்த வழக்கில், கல்லூரி மாணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ₹10 லட்சம் கடனை திருப்பிக்கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் ஆறுமுகம்(52). திருவண்ணாமலை திருவூடல் தெருவில் டெய்லர் கடை நடத்தி வந்தார்.

இவர், கடந்த 7ம் தேதி இரவு வழக்கம்போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து 2 பைக்கில் வந்த 4 நபர்கள், தேனிமலை பகுதியில் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி குணசேகரன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சிசிடிவி காட்சி பதிவுகளின் அடிப்படையில் கொலையாளிகளை அடையாளம் கண்டனர்.

அதைத்தொடர்ந்து, இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட, தண்டராம்பட்டு அடுத்த வரகூர் கிராமத்தை சேர்ந்தை கார் டிரைவர் பரந்தாமன்(38) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது, டெய்லர் ஆறுமுகத்திடம் கடந்த 2016ம் ஆண்டு முதல் படிப்படியாக ₹10 லட்சம் வரை கடன் வாங்கியதாகவும், அதை திருப்பி கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்ததால் தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்காக, கூலிப்படையினரை ஏவி கொலை செய்ததாகவும் அதற்காக ₹3 லட்சம் வரை பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, தொடர்ந்து 4 நாட்களாக நோட்டமிட்டு, தனியாக இரவு நேரத்தில் செல்லும்போது கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார்.கார் டிரைவர் பரந்தாமன் கொடுத்த தகவலின் அடிப்படையில், கூலிப்படையாக செயல்பட்ட  கலசபாக்கம் தாலுகா, சாலையனூர் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் பாரதி(21), திருவண்ணாமலை சாரோன் கரையான் செட்டி தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழரசன்(20), எடப்பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பூனை என்கிற காந்த்(20) ஆகிய 3 பேரையும் நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரையும், திருவண்ணாமலை ஜேஎம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதோடு, இந்த கொலைக்கான சதி திட்டம் தீட்டியதில் தொடர்புடைய மேலும் 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர் உள்ளிட்ட இளைஞர்கள், பணத்துக்கு ஆசைப்பட்டு கொலையில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: