1000 ஆண்டுகள் பழமையான 104 கோயில்களுக்கு திருப்பணி செய்ய ரூ.100 கோடி நிதி: அறநிலையத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: ஆயிரம் ஆண்டுகள் பழமையான 509 கோயில்களும் புனரமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சேலம் மேற்கு இரா.அருள் (பாமக), கோபிசெட்டிபாளையம் கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக), அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார் (திமுக), காட்டுமன்னார்கோவில் சிந்தனைசெல்வன் (விசிக), பென்னாகரன் ஜி.கே.மணி (பாமக), ஒரத்தநாடு வைத்திலிங்கம் (அதிமுக) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பதில் வருமாறு: சூரமங்கலம் மாரியம்மனே கோயிலுக்கு உபயதாரர்கள் நிதியைக்கொண்டு ரூ.12 லட்சத்து 30 ஆயிரம் செலவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. அதில் உபரியாக உள்ள ரூ.7 லட்சத்தை அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு ஒதுக்க ஒப்புதல் பெற மாநில குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உபயதாரர் நிதி இல்லாவிட்டாலும் ஆணையரின் பொது நிதியைக்கொண்டு திருப்பணியும், கும்பாபிஷேகமும் ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும்.

 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு 104 பழமையான கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. பண்ணாரியம்மன் கோயிலுக்கு 7 நிலை ராஜகோபுரம் அமைப்பதற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயிலும், விரிஞ்சிபுரம் ஈஸ்வரன் கோயிலும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. அவற்றை புனரமைக்க மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. காட்டுமன்னார்கோவில் திருமுட்டம் நித்தீஸ்வரர் கோவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதன் அனுமதி பெற்று அந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்துவது குறித்து விரைவில் நல்ல செய்தி தரப்படும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான 509 கோயில்களையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரத்தநாடு வன்மீகநாதர் கோயிலும் இந்த பட்டியலில் உள்ளது. இந்த நிதி ஆண்டில் 1500 கோயில்களுக்கு ரூ.1000 கோடியில் திருப்பணி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: