செங்கல் சூளையில் பணியாற்றிய 20 குழந்தைகள் மீட்பு-அதிகாரிகள் நடவடிக்கை

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம் அன்பில் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் குறித்த ஆய்வு நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வின் போது மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் குமார், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சிவராஜ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் பிரியங்கா, சைல்டு லைன் 1098 பணியாளர் மீனா மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளி,ஆசிரியர் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் செங்கல் சூளையில் வேலை பார்த்த குழந்தை தொழிலாளர்கள், பள்ளி செல்லாத குழந்தைகள் 20 பேர் கண்டறியப்பட்டனர்.

இதையடுத்து குழந்தைகள் அனைவரும் மீட்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் பாரதி விவேகானந்தன் ஆகியோர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் அந்த குழந்தைகள் பள்ளியில் சேர்க்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் முதல்கட்டமாக 12 பேர் உடனடியாக பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை திருமணம் தடுப்பு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தை வளரிள பருவ தொழிலாளர் நடைமுறைப்படுத்துதல் சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பு சேகரன் தலைமையில் மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தை நல சார்ந்த சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.

Related Stories: