பணி ஒதுக்கீடு விவகாரம் கவுன்சிலர் தலைமையில் தரையில் படுத்து போராட்டம்-நெல்லியாளம் நகராட்சி வளாகத்தில் பரபரப்பு

பந்தலூர் : ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஒதுக்கீடு விவகாரத்தில் விதிமுறையை கடைபிடிக்க கோரி நெல்லியாளம் நகராட்சி வளாகத்தில் அதிமுக கவுன்சிலர் தலைமையில் தரையில் படுத்து காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதனால், பரபரப்பு ஏற்பட்டதுநீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா, நெல்லியாளம் நகராட்சியில், வருங்கால வைப்பு நிதி செலுத்தாத ஒப்பந்ததாரர்கள், டெண்டரில் பங்கேற்க இயலாது என தெரிவிக்கப்பட்டிருந்தது, நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம் 56 ஒப்பந்ததாரர்கள் உள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் வருங்கால வைப்பு நிதி செலுத்தாமல் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 3 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 17 பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டது. இதில், வருங்கால வைப்பு நிதி செலுத்தாத 7 ஒப்பந்ததாரர்களுக்கு, நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் தன்னிச்சையாக முடிவு செய்து,  40 லட்சம் முதல் 95 லட்சம் ரூபாய் வரையிலான 7 பணிகளை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இந்த செயல் நகராட்சி விதிமுறைகளுக்கு எதிரானது, வருங்கால வைப்பு நிதி செலுத்தி முறையாக டெண்டரில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். எனவே, டெண்டரை ரத்து செய்து, விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர் ஜாபீர் தலைமையில், அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம், மாணவரணி மாவட்ட துணை செயலாளர் நஷ்ருதீன் உள்ளிட்ட கட்சியினர் நெல்லியாளம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், தேவாலா டிஎஸ்பி செந்தில்குமார், தாசில்தார் நடேசன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, மதியம் நகராட்சி பொறியாளர் வசந்த், நகராட்சிகளின் நிர்வாக இயக்குநரிடம் பேசி, அவரின் உத்தரவுபடி இந்த டெண்டர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், மேல் நடவடிக்கை குறித்து கவுன்சிலர் ஜாபீரிடம் முன் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.இதையடுத்து நேற்று மதியம் 1 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் நெல்லியாளம் நகராட்சி ஊழியர்கள் இடையே பரபரப்பு நிலவியது.

Related Stories: