கொள்ளிடம் பயணியர் விடுதியில் இடிந்த சுற்றுச்சுவரை மீண்டும் கட்ட வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் பயணியர் விடுதியில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை மீண்டும் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே கொள்ளிடத்திலிருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் பயணியர் தங்கும் விடுதி உள்ளது. நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள இந்த பயணிகள் விடுதி அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு புது பொலிவுடன் திகழ்ந்து வருகிறது.

ஆங்கிலேயரின் ஆட்சியின்போது பயணியர் தங்கும் விடுதி அமைந்துள்ள இடம் குதிரை லாயமாக இருந்து வந்துள்ளது. இதற்கான தடையும் இன்றும் உள்ளது. ஆங்கிலேயர்கள் அப்போது குதிரையில் வந்து இந்த பயணியர் விடுதியில் தங்கி அவர்கள் ஏறி வந்த குதிரையை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு இங்கு இருந்த குதிரை லாயம் பயன்படுத்தப்பட்டு வந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பயணியர் தங்கும் விடுதி கட்டிடம் வெள்ளையர்கள் ஆளுகையின் போது பல உயர் அதிகாரிகள் வந்து தங்கி உள்ள இடம் என்று இன்றும் போற்றி பேசப்பட்டு வருகிறது.

இந்த விடுதிதான் இன்றும் சென்னையிலிருந்து கொள்ளிடம் பகுதி வழியே செல்லும் உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முக்கிய தங்கும் விடுதியாக இருந்து வருகிறது. நல்ல காற்றோட்ட வசதியும், நல்ல குடிநீர் வசதியும், நல்ல சுற்றுப்புற சூழ்நிலையிலும் இந்த விடுதி கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு நிலத்தடி நீர் நல்ல குடிநீராக இருந்து வருகிறது. நல்ல காற்றோட்ட வசதியையும் இந்த விடுதி கொண்டுள்ளது.

இப்பகுதியின் வெளியே செல்லும் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இந்த இடத்தை தேர்ந்தெடுத்து தங்கி செல்வதும், ஓய்வெடுத்து செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தின் வடக்கு எல்லையும், கடலூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையும் சந்திக்கும் இடத்திலும் இந்த பயணியர் தங்கும் விடுதி இருந்து வருகிறது. இந்த விடுதியைச் சுற்றி பாதுகாப்பாக காலம் காலமாக சுற்றுச்சுவர் இருந்து வருகிறது.

இதனால் வாயில் கேட் திறந்தால் மட்டுமே இந்த விடுதிக்குள் செல்லும் வசதி இருந்து வருகிறது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழை மற்றும் அதிவேகமாக வீசிய காற்றின் காரணமாக பயணியர் தங்கும் விடுதி கட்டிட வளாகத்தில் உள்ள ஒரு பெரிய மாமரம் அடியோடு சாய்ந்ததால் சுற்றுச்சுவரின் மேல் விழுந்ததில் சுவற்றின் ஒரு பகுதி இடிந்து நொறுங்கியது. இதனால் கடந்த இரண்டு மாத காலமாக திறந்தே கிடக்கிறது. எனவே இடிந்த பயணியர் தங்கும் விடுதியில் சுற்றுச்சுவரை உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: