புதுவையை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது சென்னையில் இருந்து கிலோ கணக்கில் கஞ்சா சப்ளை-விசாரணையில் பகீர் தகவல்

காலாப்பட்டு :  கோட்டக்குப்பத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, சென்னையில் இருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவதாகவும், அதை அவர்கள் இங்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.புதுவை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீத் நகர் பகுதியில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, புதுச்சேரி ஆட்டுப்பட்டி மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்த குமார் மகன் அருள் (எ) பாண்டியன் தனது பாட்டி வீட்டில் தங்கி, புதுச்சேரியிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, கோட்டக்குப்பம் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த அருள் மகன் அஜித்குமார் (26), முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் அருண்குமார் (22) ஆகியோர் தனக்கு கஞ்சா சப்ளை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து மூவரையும் அதிரடியாக கைது செய்த போலீசார், அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.

அஜித்குமாரும், அருண்குமாரும் சென்னை தாம்பரத்தில் உள்ள கேசவன் என்பவரது வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்புவார்களாம். அதன்பிறகு கேசவன் அங்கிருந்து ஒரு நபர் மூலம் புதுவை பஸ் நிலையத்திற்கு கிலோ கணக்கில் கஞ்சாவை அனுப்பி வைப்பாராம். இதை புதுச்சேரியிலும், கோட்டக்குப்பத்திலும் விற்பனை செய்வார்களாம்.

இதையடுத்து கஞ்சா சப்ளை செய்த சென்னை கேசவன் குறித்தும், இதில் மேலும் யாராவது ஈடுபட்டுள்ளனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் 400 கிராம் கஞ்சா, கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: