கடைசி நேரத்தில் விலகினார் பும்ரா

இலங்கை அணியுடன் நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில், வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டிருந்தார். காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்து வரும் அவர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமி வளாகத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். போட்டியில் களமிறங்கும் அளவுக்கு முழு உடல்தகுதி உள்ளதா என்பதை கண்டறிவதற்கான பரிசோதனையில் அவர் வெற்றிகரமாக செயல்பட்டதை அடுத்து, இலங்கைக்கு எதிராக அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், மும்பையில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட பரிசோதனையின்போது, பும்ரா காலில் வலி ஏற்பட்டதை அடுத்து ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டியில் பும்ரா விளையாடுவதும் கேள்விக்குறியாகி உள்ளது.

இது குறித்து கேப்டன் ரோகித் கூறுகையில், ‘இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா விளையாட முடியாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பழையபடி முழு வேகத்துடன் பந்துவீசத் தயாரான நிலையில், திடீரென முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. இது சாதாரணமான தசைப்பிடிப்பு தான். பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், பும்ரா விஷயத்தில் நாங்கள் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கு முன்பாகஅவர் காயம் அடைந்ததால் ஏற்பட்ட பாதிப்பை நாம் மறந்துவிடக் கூடாது’ என்றார். இலங்கை ஒருநாள் தொடரில் பும்ராவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள், அவரது இந்த திடீர் விலகலால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Stories: