சட்டப்பேரவை கூட்டம் ஜன.13ம் தேதி வரை நடக்கும்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: 2023ம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர், வரும் 13ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியிருப்பதாவது: 2023ம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தின் முடிவின் படி, மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மற்றும் மறைந்த உறுப்பினர்களுக்கான இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி சட்டமன்றம் முழுமையாக ஒத்திவைக்கப்படுகிறது. அதன்பின், இன்று மற்றும் (நாளை) சட்டமன்றம் முழுமையாக நடைபெறுகிறது. மேலும் வரும் 13ம் தேதி முதல்வரின் பதிலுரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம்பெறுகிறது.

ஆளுநரின் உரை கடந்த 5ம் தேதி ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டு ஜன.7ம் தேதி இசைவு தெரிவித்தனர். அதில், நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று பல பகுதிகளை விட்டும் புதிதாக பல பகுதிகளை சேர்த்தும் ஆளுநர் வாசித்துள்ளார். ஆளுநர் உரையில் எழுதி ஒப்புதல் பெறப்பட்ட, உரையில் இடம்பெற்றுள்ளதை தவிர ஊடகங்கள் எதனையும் பிரசுரிக்க வேண்டாம் என முதல்வர் கண்ணியத்தோடு தீர்மானத்தை கொண்டுவந்தார். அதை சபை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்ற வந்தால் சபை நிறைவடைந்து தேசிய கீதம் பாடப்படும் வரை இருக்க வேண்டும். அது தான் மரபு. ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டம் 175, 176ன் படி மாநில சட்டமன்றங்களில் ஆளுநர் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் ஆளுநருக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது. அந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே உச்சரிக்கவில்லை என்பது வேதனையான விஷயம். அதேபோல், திராவிட மாடல் என்பதை ஆளுநரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இப்படிப்பட்ட பல பிரச்னைகளை ஆளுநர் உருவாக்குவதற்கு இருப்பார்அல்லது இருக்கிறார் என்பது வேதனையானது. இதனை அவர் தவிர்க்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டம் 151ன் படி பதவி ஏற்றுள்ளார். அதனை பாதுகாப்பது ஆளுநரின் கடமை என்று கூறினார்.

Related Stories: