நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க இடம் தேர்வு

* ஒரே நேரத்தில் 100 இருசக்கர வாகனங்கள் 45 கார்களை நிறுத்தும் வகையில் அமைகிறது

சென்னை: சென்னையை அழகுபடுத்தும் பணிகளில் மாநகராட்சி தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக, பல்வேறு பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெங்களூருவை போலவே நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலையில் 24 மணி நேரமும் செயல்படும் நடைபாதை பிளாசா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காதர் நவாஸ்கான் சாலையில் உணவகங்கள், சிற்றுண்டி கடைகள், வணிக வளாகங்கள் என்று பகல் மற்றும் இரவு நேரங்களில் பரபரப்பாக இயங்கி வருகிறது.

குறிப்பாக வார இறுதி நாட்களில் சென்னைவாசிகளின் கொண்டாட்ட தளமாகவும் இந்த சாலை மாறி வருகிறது. எனவே, இந்த சாலையை வெளிநாடுகளில் உள்ளதை போல் சர்வதேச தரத்திலான சாலையாக மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்படி, அகலமான நடைபாதைகள், பூங்காக்கள், பொதுமக்கள் அமருவதற்கான இருக்கை வசதி, குழந்தைகள் விளையாடும் இடங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளது. சாலையின் முன்பகுதியில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு, கார்பன் உமிழ்வு இல்லாத சாலையாகவும் மாற்றப்பட உள்ளது.

புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் கலை நிகழ்ச்சிகள், சாலைகளில் இசை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தும் வகையிலும் இந்த சாலை மாற்றி அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையில் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட உள்ளது. உலக வங்கியின் சென்னை நகர கூட்டமைப்பு திட்டத்தின் கீழ் 19 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை பிளாசா அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த பணிகள் முடியும்போது, அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். இதனால், காதர் நவாஸ்கான் சாலையில் கூடுதல் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில், மல்டி லெவல் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 45 கார்களை ஒரே நேரத்தில் நிறுத்த ஏதுவாக பார்க்கிங் நிலையத்தை அமைக்க சரியான இடம் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்போது இருக்கும் பார்க்கிங் மையத்தை தாண்டி கூடுதல் வாகனங்களை நிறுத்த இந்த பகுதி மேம்ப்படுத்தப்பட உள்ளது.  இதுமட்டுமல்லாமல் மின்சார வாகனங்களை பயன்படுத்துவோரின் வசதிக்காக, இங்கு மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட்களை அமைக்கவும் மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த பகுதிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் ஆய்வு செய்தார்.

சாக்கடை உள்ளிட்ட அங்கு நடந்து வரும் பணிகள் அனைத்தையும் பார்வையிட்டு, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த பணிகளை முடித்தால் தான் பிளாசா பணிகளை எந்தவொரு இடையூறும் இல்லாமல் முடிக்க முடியும் என்பதால் இந்த பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களை அவர் அறிவுறுத்தினார். இப்போது வரை பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், ஆப்டிக் பைபர் குழாய்கள் மின்சார வயர்கள் குழாய்கள் மற்றும் நீர் வழித்தடங்கள் ஆகியவற்றின் பணிகள் 50 சதவீதம் முடித்துள்ளதாக அதிகாரிகள் அவரிடம் கூறினர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்த பணிகளை முழுமையாக நாங்கள் முடித்துவிடுவோம். அடுத்து நடைபாதை விரிவுபடுத்தும் பணிகள் என பிளாசாவுக்கான பணிகளை விரைவில் தொடங்குவோம். 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்த பிளாசா பணிகளை முடிக்க வேண்டும் என்பதே எங்களின் திட்டமாக உள்ளது. இந்த பகுதியில் இருக்கும் பெரும்பாலானவை வணிக கட்டிடங்கள் தான். எனவே, அதையும் கருத்தில் கொண்டு இந்த பகுதிக்கு வருவோருக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை தர நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மேலும், இந்த பகுதியில் கலைப் படைப்புகளை நிறுவவும் திட்டமிட்டுள்ளோம். பொதுவாக எந்தவொரு பகுதியாக இருந்தாலும் நடந்து சென்றால் தான் அந்த இடங்களை முழுமையாகச் சுற்றிப் பார்க்க முடியும். இதன் காரணமாகவே உலகெங்கும் பல நகரங்களில் உள்ள முக்கிய பகுதிகள் இதுபோல பிளாசாக்களாக மாற்றம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு இணையாக சென்னையில் இவற்றை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் திட்டமாக இருந்து வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் எளிதாகச் சென்று வரவும் இங்கே நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

The post நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க இடம் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: