ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில் எருது விடும் விழாவுக்கு அனுமதி கேட்டு கிராம மக்கள் மனு-விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி தகவல்

அணைக்கட்டு :  வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் அதனை தொடர்ந்து கோயில் திருவிழாக்களை முன்னிட்டு நடத்தப்படும் எருது விடும் விழாக்களுக்கு  அனுமதி கேட்டும் கிராமத்தினர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்திருந்தார். மேலும் அதற்கான கால அவகாசம் கடந்த 6ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் அணைக்கட்டு தாலுகாவில் இந்த வருடம் புதியதாக எருதுவிடும் விழா நடத்த அனுமதி கேட்டு பல கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களுடைய கிராமங்கள் விழா அனுமதிக்கு விண்ணப்பிக்கும் ஆன்லைன் வெப் சைட்டில் வராததால் அவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் இந்த வருடம் எங்கள் கிராமத்திலும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என வேலூர் கலெக்டர் அலுவலகம், ஆர்டிஒ, அணைக்கட்டு தாசில்தாரிடம் மனுக்களை அளித்து வருகின்றனர். அதன்படி இந்த வருடம் புதியதாக அணைக்கட்டு அடுத்த ஊனை, ஊனைமோட்டூர், சென்றாயங்கொட்டாய், அப்புக்கல், கரடிகுடி, குடிசை, மலை கிராமங்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் எருதுவிடும் விழாக்கள் நடத்த அனுமதி கேட்டு வேலூர் கலெக்டர் அலுவலக எம்எச், ஆர்டிஒ, தாசில்தாரை நேரடியாக சந்தித்து மனுக்களை அளித்தனர்.

மேலும் அந்த மனுக்களில் கடந்த பல ஆண்டுகளுக்கு எங்கள் கிராமங்களும் எருது விழாக்கள் நடத்தும் கிராமங்களாக இருந்தவை தான், ஆனால் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கபட்ட இந்த 4, 5 ஆண்டுகளாக நடத்தப்படாததால் எங்கள் கிராமங்களின் பெயர்கள் வெப் சைட்டில் பதிவாகாமல் உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் எருதுவிடும் விழாவுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, எனவே எங்கள் கிராமங்களும் எருது விடும் விழா அரசு இதழில் ஏற்றப்பட்டு, இந்த ஆண்டு முதல் மீண்டும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மனுக்களை பெற்ற அலுவலர்கள் அதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு முதல் புதியதாக விழா நடத்த அனுமதி கேட்டுள்ள கிராமங்களில் விழா நடத்த போதிய வசதிகள் உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டு அந்த கிராமங்களில் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கபடும் என்றனர்.

Related Stories: