பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

ஊட்டி:  ஊட்டி  அருகேயுள்ள பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்  திடீர் ஆய்வு மேற்கொண்டு சுற்றுலா பயணிகளுடன் கலந்துரையாடினார்.

நீலகிரி  மாவட்டம் ஊட்டி - கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா அணையில் சுற்றுலாத்துறை  சார்பில் செயல்படும் படகு இல்லம் உள்ளது. அடர்ந்த வனங்களுக்கு நடுவே உள்ள  இந்த அணையில் படகில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி  வருகின்றனர்.

இப்படகு இல்லத்தில் மோட்டார் படகுகளும், தண்ணீரை கிழித்து  கொண்டு செல்ல கூடிய ஸ்பீடு படகுகளும் உள்ளன. சாகசத்தை விரும்ப கூடிய  சுற்றுலா பயணிகள் ஸ்பீட் படகில் பயணிப்பார்கள். நகருக்கு வெளியில்  அமைந்துள்ளதால் கேரளாவில் இருந்து வர கூடிய சுற்றுலா பயணிகள் இப்படகு  இல்லத்திற்கு வந்து படகு சவாரி செய்து மகிழ்வார்கள். இதுதவிர பிற பகுதிகளை  சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக  சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பைக்காரா படகு இல்லத்தில் திடீர்  ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மோட்டார் படகில் பைக்காரா ஏரியில் படகு  சவாரி செய்தார்.

பின்னர் அங்கு படகு சவாாிக்காக வந்திருந்த சுற்றுலா  பயணிகளிடம் பைக்காரா படகு இல்லம் குறித்தும் அனைத்து வசதிகளும் உள்ளனவா?  வேறு எந்தமாதிரியான பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்? என்பது  குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு உள்ள அலுவலகத்திற்கு சென்ற  அமைச்சர் பதிவேடுகளை பார்வையிட்டார். பின்னர் சுற்றுலாத்துறை சார்ந்த  அலுவலர்களுடன் பைக்காரா படகு இல்லத்தில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு  பணிகள் குறித்து விவாதித்தார். இந்த நிகழ்வின் போது சுற்றுலாத்துறை  அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: