பழவேற்காட்டில் மீன்பிடி தகராறில் மீனவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல்: 7 பேர் படுகாயம்; 13 பேர் கைது

பொன்னேரி: பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக 2 பகுதி மீனவர்களுக்கு இடையே முன்விரோத தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு 2 தரப்பு மீனவர்களுக்கு இடையே வன்முறை கோஷ்டி மோதலாக வெடித்தது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் நேரில் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக போலீசார் 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, 13 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொன்னேரி அருகே பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக கூனங்குப்பம் மற்றும் ஆண்டிக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம் உள்பட 12 கிராம மீனவர்களிடையே நீண்ட காலமாக பிரச்னை மற்றும் முன்விரோத தகராறு இருந்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களும், அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. எனினும், இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு காண முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த மாதம் பழவேற்காடு ஏரியில் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கூனங்குப்பம் கிராம மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும். இதில் கடலுக்கு பயன்படுத்தும் மீன்பிடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக கூனங்குப்பம் மற்றும் நடுவூர் மாதாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே வன்முறை மோதல் ஏற்பட்டது. இப்புகார்களின்பேரில் திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு பழவேற்காட்டில் கூனங்குப்பம் மற்றும் நடுவூர் மாதாங்குப்பம் மீனவ கிராம மக்களிடையே எல்லைமீறி மீன்பிடித்ததாக மீண்டும் வன்முறை கோஷ்டி மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரி ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

இந்த கோஷ்டி மோதலில் ஆரோக்கியதாஸ் (40), சந்தியா ராஜி (50), ராபர்ட் (30), சகாயதாஸ் (31), சாலமோன் (18), பாலு (33), மார்டின் (36) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி கல்யாண், பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், தாசில்தார் செல்வகுமார் மற்றும் மீன்வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தி, தீவிர விசாரணை நடத்தினர். மேலும், படுகாயம் அடைந்த 7 மீனவர்களையும் போலீசார் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்புகார்களின்பேரில் திருப்பாலைவனம் போலீசார் 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, மீனவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் தொடர்பாக இன்று காலை  இரு தரப்பு மீனவ கிராமத்தை சேர்ந்த யோகானந்த் (19), தேசப்பன் (60), தங்கமணி (52), ராஜேஷ் (35), குணாளன் (35), ராஜ் (60), பிரேம்குமார் (37), பிரபாகரன் (37), மாசிலா (70), நாகூரான் (61), கத்திரி (60), லட்சுமணன் (53), சரண் (22) ஆகிய 13 பேரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், பழவேற்காடு பகுதியில் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க 200க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: