திருச்சி அருகே பரபரப்பு: ரூ.3.50 லட்சத்துக்கு குழந்தை விற்பனை; காணோம் என நாடகமாடிய தாய் கைது: வாங்கியது யார்?..போலீஸ் விசாரணை

லால்குடி: பெற்ற குழந்தையை விற்பனை செய்துவிட்டு, காணாமல் போனதாக நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் மங்கம்மாள் புரத்தை சேர்ந்தவர் ஜானகி(32). இவர், லால்குடியில் வக்கீலாக பணியாற்றுவரின் 2வது மனைவி சண்முகவள்ளி (38)வின் அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதன் மூலம் வக்கீலுக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதில் ஜானகி திருமணமாகாமலே கர்ப்பம் ஆனார். அவருக்கு பெண் குழந்தை பிறந்ததும் வக்கீலிடம் ஒப்படைத்தார். வக்கீல் அந்த குழந்தையை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஒருவரிடம் விற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், வக்கீல் ரூ.1 லட்சத்துக்கு மட்டுமே விற்றதாகவும், அதில் தான் ரூ.20 ஆயிரத்தை எடுத்து கொண்டதாகவும் தெரிவித்து, ஜானகியிடம் ரூ.80 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளார். பின்னர்தான் குழந்தையை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வக்கீலும், சண்முகவள்ளியும் விற்றது அவருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தையை விற்றதை மறைத்து, குழந்தையை வக்கீலிடம் கொடுத்ததாகவும், அதன்பின் காணாமல் போய்விட்டதாகவும், லால்குடி போலீஸ் ஏஎஸ்பி அஜய் தங்கமிடம் கடந்த 5ம்தேதி புகார் அளித்தார்.

அவர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்படவே தீவிர விசாரணை நடத்தியதில் அவரது விருப்பத்தின் பேரில் குழந்தையை வக்கீல், அவரது 2வது மனைவி சண்முகவள்ளி ஆகியோர் விற்றதும் ஜானகி குழந்தை காணாமல் போய்விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து லால்குடி போலீசார் வழக்குப்பதிந்து ஜானகியை கைது செய்தனர். குழந்தை யாரிடம் விற்கப்பட்டது, இதில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: