காயத்ரி ரகுராமை தொடர்ந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பா.ஜ.வில் இருந்து விலகல்

சென்னை: நடிகை காயத்ரி ரகுராமை தொடர்ந்து, பாஜவில் இருந்து விலகுவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் அறிவித்துள்ளார். தமிழக பாஜவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் முன்னாள் தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 3ம் தேதி பாஜவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அப்போது, அவர் ‘‘பாஜவில் அண்ணாமலை இணைந்த பிறகு தான் வீடியோ, ஆடியோ கலாசாரம் வந்தது. பாஜவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அண்ணாமலை மலிவான பொய் பேசும், அதர்மத்தின் பக்கம் நிற்கும் தலைவர். நான் பாஜவில் இருந்து விலகுவதற்கு அண்ணாமலையே காரணம். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

பெண்களே நீங்களே உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். மரியாதை இல்லாத இடத்தில் பெண்கள் தொடர்ந்து இருக்கக்கூடாது. என்னிடம் உள்ள ஆடியோ, வீடியோக்கள் என அனைத்து ஆதாரங்களையும் போலீசிடம் வழங்கி, அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று புகார் அளிப்பேன்’’ என்று அவர் தெரிவித்தார். நடிகை ஒருவரின் பரபரப்பு குற்றச்சாட்டு பாஜவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்த பாஜ தலைவர் அண்ணாமலை, ‘‘என் மீது புகார் சொல்லாதவர்கள் யாரும் இல்லை.

காயத்ரி ரகுராமின் புகாரையும் அப்படி தான் எடுத்து கொள்வேன்’’ என்று மட்டும் தெரிவித்தார். நடிகை காயத்ரி ரகுராமின் பிரச்னை முடிவுக்கு வருவதற்குள், மற்றொரு நடிகையும்,இயக்குனருமான பாஜவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதாவது பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தான் தற்போது பாஜவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  அதில், ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் விலகுவதாக’வும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாஜவில் இருந்து பாதுகாப்பு இல்லை என்று கூறி பெண்கள் வெளியேறுவது தற்போது பாஜவில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: