மோடி அரசின் கொள்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே: பிருந்தா காரத் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13வது அகில இந்திய மாநாடு  திருவனந்தபுரத்தில் நேற்று  துவங்கியது. திருவனந்தபுரம் எம்.சி.ஜோசபின் நகரில் பொது  மாநாட்டை கேரள கலாமண்டலம் பல்கலைக்கழக (தன்னாட்சி) வேந்தரும் நடனக்  கலைஞருமான மல்லிகா சாராபாய் துவக்கி வைத்தார். அகில இந்திய தலைவர் மாலினி  பட்டாச்சார்யா கொடி ஏற்றினார். சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் புரவலருமான பிருந்தா  காரத், கியூப புரட்சியாளர் சே  குவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா, மனித உரிமைப் போராளி டீஸ்டா  செதல்வாத் உள்ளிட்டோர் பேசினர். நாடு முழுவதிலும் இருந்து 850 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டில் பிருந்தா காரத் பேசியதாவது: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உதயமாகி தனது 40ஆவது ஆண்டுகள் ஆகின்றன.

40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் 1981 மார்ச் மாதத்தில் மாதர் சங்கத்தின்  முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. முதலாளித்துவம் அமலாக்கிய நவீன தாராளமயக் கொள்கைகளால் மிக மோசமாக  பாதிக்கப்பட்டக் கொண்டிருப்பவர்கள் பெண்கள்தான். தற்போது மோடி அரசால் வலிந்து திணிக்கப்படும்  கொள்கைகள் முழுவதும் கார்ப்பரேட் ஆதரவு - தொழிலாளர் விரோத கொள்கைகள் ஆகும்.  இந்தக்  கொள்கைகளாலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது பெண்கள்தான்.  இந்தக் கொள்கைகள் குறிப்பிட்ட சில கார்ப்பரேட் பெரும் நிறுவனங்கள் செல்வ  வளங்களை குவிப்பதற்காக மட்டுமே கொண்டுவரப்பட்டவை. இவற்றின்  விளைவாக ஏற்றத்தாழ்வு மிகத் தீவிரமடைந்துள்ளது; அது நேரடி யாக பெண்களை  கடுமையாக தாக்குகிறது. மோடியின் நண்பர் அதானி ஒரு  நாளைக்கு 1612 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால் ஒரு ஏழை, கிராமப்புற தொழிலாளி ஒரு நாளைக்கு 250 ரூபாய் கூட சம்பாதிக்க இயலாத நிலையில் உள்ளார்.  

மோடியின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் வேலையின்மையை தீவிரப்படுத்தியுள்ளது. நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இது நம் நாட்டை மட்டுமல்லாமல் பெண்களையும் கடுமையாக பாதிக்கிறது. எனவே மத ஒற்றுமைக்கான போராட்டம் தான் நம்முடைய முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும். மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். உலகில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த போராட்டத்தை இந்த அமைப்பு தொடங்க வேண்டும் என்று செகுவேராவின் மகள் அலெய்டா குவேரா பேசும்போது குறிப்பிட்டார். வரும் 9ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.

Related Stories: