வில்லியனூர் : வில்லியனூர் அடுத்த கோபாலன்கடை அம்மா நகரில் ரவுடி ஓட, ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்லியனூர் அடுத்த கோபாலன்கடை, அம்மா நகர் பகுதியில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வில்லியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சீனியர் எஸ்பி தீபிகா மற்றும் இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு, கிரைம் போலீஸ் எழில் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுபட்டு இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் அம்மா நகரை சேர்ந்த ரவுடி ராஜா (32) என்பதும், இவர் கார் டிரைவராக பணிபுரிந்து வந்ததும், இவருக்கு அம்சா (36) என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். நேற்று மாலை ராஜா அவரது வீட்டிலிருந்து வெளியே வரும் போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துள்ளது. அப்போது ராஜா அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடியுள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் வில்லியனூர் மூர்த்தி நகர் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று சகோதரி ரமணி, மாமா சங்கர் ஆகியோரின் திருமண நாளை வீட்டின் எதிரே சாலையில் கேக் வெட்டி, மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறாக பாட்டு போட்டு ராஜா தனது நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது எதிர்வீட்டை சேர்ந்த திருமணமாகி 3 மாதங்களே ஆன ஏசி மெக்கானிக் மணிகண்டன் இதனை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மணிகண்டனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதில் முதல் குற்றவாளியாக ராஜா கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது அம்மா நகர் பகுதியை சேர்ந்த சதீஷை கொலை செய்ய முயன்ற முன்விரோதத்தில் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகள் மிகுந்த மத்தியில் பட்டப்பகலில் வாலிபரை ஓட, ஓட வெட்டிகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.