வேப்பனஹள்ளி அருகே வாழை, தக்காளி தோட்டத்தை நாசம் செய்த யானைகள்-மின்வேலி அமைத்து தர வலியுறுத்தல்

வேப்பனஹள்ளி : வேப்பனஹள்ளி அருகே வாழை, தக்காளி தோட்டத்தை யானைகள் நாசப்படுத்தியதால், விவசாயிகள் கவலையடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சானசந்திரம், தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் கர்நாடக வனப்பகுதியும் அடங்கி உள்ளது. இங்கு யானைகள் அடிக்கடி முகாமிட்டு சுற்றி வருவது வாடிக்கையாக உள்ளது. நேற்று முன்தினம், தேன்கனிக்கோட்டை பகுதியில் 70க்கும் மேற்பட்ட யானைகள் வந்தது. இதனை வனத்துறையினர் பட்டாசு வெடித்து கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டினர்.

இந்நிலையில், கர்நாடக எல்லை மற்றும் தமிழக வனப்பகுதியையொட்டிய வேப்பனஹள்ளி அருகே கட்டாயபீடு, பதிமடுகு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில், நேற்று முன்தினம் இரவு, 3 காட்டு யானைகள் புகுந்தது. அங்கு பயிரிட்டிருந்த வாழை, தக்காளி, முட்டை கோஸ் உள்ளிட்டவைகளை தின்றும், கால்களால் மிதித்தும் நாசப்படுத்தி மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விட்டன.  நேற்று காலை, வழக்கம் போல் தண்ணீர் பாய்ச்ச வந்த விவசாயிகள், வாழை மற்றும் தக்காளி ேதாட்டம் நாசமானது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘காட்டு யானைகள் இப்பகுதியில் தொடர்ந்து விளைநிலங்களில் புகுந்து, பயிர்களை நாசம் செய்து வருவதால், கர்நாடக வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதைப் போல் தமிழக வனப்பகுதியிலும், அனைத்து கிராமங்களுக்கும் மின்வேலி அமைத்து தர  வேண்டும்,’ என்றனர்.

Related Stories: