பெண்ணாடம் அருகே கொள்ளையடிக்க திட்டம் 8 பேர் கும்பல் அதிரடி கைது-ஆயுதங்கள் பறிமுதல்

பெண்ணாடம் : பெண்ணாடம் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடகரை கிராமத்தில் உள்ள ஒரு கொட்டகையில் வெளியூரை சேர்ந்த கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பெண்ணாடம் காவல் உதவி ஆய்வாளர் பிரகஸ்தி தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற கும்பலை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், பட்டுக்கோட்டை நைனார்குளம் செந்தில்குமார் என்கிற அர்ஜுன்(39), கரூர் பசுபதிபாளையம் கவுதம் வினித்(30), கார்த்தி(24), வடிவேல் (35), ராஜசேகரன்(23), தனபால் (29), திருநெல்வேலி தேவிபட்டினம் கார்த்திக்குமார் (19), தஞ்சாவூர் ரவி என்கிற ரவிச்சந்திரன்(50) என தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் சேர்ந்து பெண்ணாடம் பகுதியில் கூட்டு கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் மேல் பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 6 கத்தி, 3 கட்டை, 5 ஆக்சா பிளேடு, 2 கம்பி, 2 அரிவாள் மற்றும் கையுறை, மங்கி குல்லா உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். துரிதமாக செயல்பட்டு 8 பேரை கைது செய்த போலீசார் ஏஎஸ்பி அங்கிட் ஜெயின் பாராட்டினார். ஆயுதங்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: