கடந்த 20 நாட்களுக்கு மேலாக குன்னூர் தேயிலை தோட்டத்தில் உலாவரும் காட்டு யானைகள்

குன்னூர்: குன்னூர் தேயிலை தோட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் சமவெளி பகுதிகளில் இருந்து குட்டிகளுடன் வந்த 9 காட்டு யானைகள் குன்னூரில் கடந்த 20 நாட்களாக முகாமிட்டுள்ளன. அவ்வப்போது சாலையை கடந்துச் செல்லும் இந்த யானைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டத்தில் உணவை தேடி செல்கின்றன. இதனால், தொழிலாளர்கள், பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்கள் அச்சத்தில் வீட்டைவிட்டு வெளியேறாமல் முடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் குன்னூர் காட்டேரி பகுதியில் சாலையோர தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இங்கு முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த செலுக்காடி பகுதியில் காட்டுயானை ஒன்று நேற்று முன்தினம் புகுந்தது. இது தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டினர். அப்போது செலுக்காடியை சேர்ந்த பாபு என்பவரின் வீட்டின் நிறுத்தப்பட்டிருந்த காரை அடித்து நொறுக்கியது. இதன்பின்னர் யானையை வனத்துறையினர் வனத்துக்குள் விரட்டி விட்டனர்.

Related Stories: