அலங்காநல்லூர் அருகே வாடிவாசலுடன் சிறுவர்கள் நடத்திய ‘மினி ஜல்லிக்கட்டு’: குட்டி குட்டி பரிசுகளும் தயாரித்து அசத்தல்

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்தாலும், அலங்காநல்லூர் அருகே சிறுவர்கள் ஜாலியாக வாடிவாசல் அமைப்புடன் காளைகள், பரிசுப்பொருட்களை பொம்மைகள் போல தயாரித்து நடத்திய மினி ஜல்லிக்கட்டு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு, வரும் 15ம் தேதி மதுரை அவனியாபுரம், 16ம் தேதி பாலமேடு, 17ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கிராம கமிட்டி நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கல், மைதானத்தை தூய்மை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெரியவர்கள் ஒருபுறம் பிஸியாக இருக்க, சிறியவர்கள் தங்கள் பங்குக்கு ஜாலியாக ஒரு மினி ஜல்லிக்கட்டையே நடத்தி, அதற்கு பரிசுப்பொருட்கள் வேறு வழங்கி அசத்தியுள்ளனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், நேற்று முன்தினம் ஒன்று கூடினர். இவர்கள், பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகளை ஏன், நாமே ரெடி செய்யக்கூடாது என திட்டமிட்டனர். உடனே களமிறங்கினர். 15க்கும் மேற்பட்ட காளை பொம்மைகள் மளமளவென தயாராகின. தென்னை நார் கழிவுகளை ஆங்காங்கே பரப்பி விட்டனர். சிறு சிறு குச்சிகளை நூல் கயிறு கொண்டு தடுப்பாக்கினர். இதேபோல ஒரு மினி வாடிவாசலையும் உருவாக்கினர். ஒரு சிறுவன் போட்டி தொடர்பான வர்ணனையில் ஈடுபட, வாடிவாசலில் இருந்து சீறி (?!?!?) வந்த காளையை, சிறுவர்களாகிய வீரர்கள் அடக்குவது போல நடத்திக் காட்டினர்.

அதுமட்டுமல்ல... போட்டியில் ஜெயித்த வீரர்கள், காளைகளுக்கு பரிசுகள் தர வேண்டாமா? அது கொடுத்தால்தானே ஜல்லிக்கட்டு? போட்டியில் வென்ற காளைகள், ‘காளையருக்கு’ மினி குக்கர் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த மினி ஜல்லிக்கட்டை குறவன்குளம் கிராம மக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர். மேலும், ஒரு ஜல்லிக்கட்டு மாடலாகவே நடத்திக் காட்டிய சிறுவர்களுக்கு பாராட்டுதலையும் வழங்கினர்.

Related Stories: