தனியாக வசித்த முதியவர் கொலை வழக்கில் வீட்டில் வேலை செய்த கொத்தனார் கைது: ரூ.3 ஆயிரத்திற்காக கொன்றது அம்பலம்

பெரம்பூர்: வியாசர்பாடி நியூ மெகசின்புரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (73). இவருக்கு சொந்தமாக 4 வீடுகள் உள்ளன. இதன் மூலம் வாடகை வருகிறது. இவரது, மனைவி ராதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகன் ராஜா, திருமணமாகி எம்கேபி நகர் பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர், அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த திங்கட்கிழமை காரைக்குடிக்கு அவரது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். பன்னீர்செல்வம் மட்டும் வியாசர்பாடி உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜா அவரது தந்தை பன்னீர்செல்வத்திற்கு 27ம் தேதி போன் செய்துள்ளார். போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த ராஜா காரைக்குடியில் இருந்து கிளம்பி 28ம் தேதி காலை தந்தையை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, பன்னீர்செல்வம் தலை மற்றும் கழுத்தில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சதீஷ், பன்னீர்செல்வத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர், குற்றவாளியை பிடிக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில், செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வானமாமாலை, ஐயப்பன், சதீஷ் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பன்னீர்செல்வம் கடைசி ஒரு மாதமாக 87 பேருடன் செல்போனில் பேசியதை கண்டுபிடித்தனர். இதில், 10 செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த, 10 எண்களையும் ஒவ்வொன்றாக கண்டுபிடித்து, அதில் 8 பேரை அடையாளம் கண்டுபிடித்தனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக செல்போன் என்னை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். இறுதியாக ஒரு நம்பரை ஆய்வு செய்ததில் அந்த எண் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தது என்றும், அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், அந்த நம்பரை வாங்கும்போது கொடுத்த மாற்று எண்ணை வைத்து அந்த எண்ணில் அழைத்து பேசியபோது அது கொலையாளியின் மனைவி என்பது தெரிந்தது. விசாரணையில் கொலையாளி, ஆந்திர மாநிலம் நெல்லூர் ஜில்லா பொட்டிகாரலபாடு கிராமத்தை சேர்ந்த ஆரேல மஸ்தானய்யா (எ) மஸ்தான் (44) என்பது தெரிந்தது.

இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் வானமாமாலை தலைமையில் தனிப்படை போலீசார், அங்கு செனறு அவரை கைது செய்தனர். விசாரணையில் மஸ்தான் அவரது மனைவி வரலட்சுமி மற்றும் மகள் சஞ்சனா மகன் சாய் சதீஷ் ஆகியோருடன் கடந்த 6 வருடங்களாக சென்னையில் மின்ட் பகுதியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். கடந்த, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, கொரோனா காலகட்டத்தில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு மீண்டும் மஸ்தான் மட்டும் சென்னை வந்து மின்ட் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் வியாசர்பாடியில் உள்ள வீட்டில் சிறுசிறு கட்டிட வேலை செய்ய  பன்னீர்செல்வம் மிண்ட் பகுதியில் உள்ள மேஸ்திரியிடம் கூறி வந்துள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்து மஸ்தான் பன்னீர்செல்வத்திடம் அறிமுகமாகி, கடந்த மாதம் 21ம் தேதி அவருடன் வியாசர்பாடிக்கு வந்து, என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பார்த்துள்ளார். அதன்பிறகு 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை பன்னீர்செல்வம் தங்கியிருந்த வீட்டில் முதல் மாடியில் தங்கி சிறு, சிறு வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி காலை ஊருக்கு செல்ல வேண்டும் என்று கூறி, ரூ.3 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு, பன்னீர்செல்வம் வேலையை முழுவதுமாக முடித்துவிட்டு, ஊருக்கு போ அப்போதுதான் பணம் தர முடியும் என கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மஸ்தான், பன்னீர்செல்வத்தை கீழே தள்ளி விட்டுள்ளார். பன்னீர்செல்வம் கூச்சலிடவே மஸ்தான் பயந்துபோய் அவரது கழுத்தை நெறித்துள்ளார். 73 வயதானவர் என்பதால் சிறிது நேரத்திலேயே பன்னீர்செல்வம் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனால், பதறிப்போன மஸ்தான் உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். போலீசார் சந்தேகப்படக்கூடாது என்பதற்காக தனது செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டு, சொந்த ஊரில் போய் தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்து, வியாசர்பாடி போலீசார் மஸ்தானை சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 9 நாட்களாக துப்பு துலங்காத கொலையில் வியாசர்பாடி போலீசார் திறம்பட செயல்பட்டு ஆந்திராவுக்கு சென்று கொலையாளியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

* குடும்பத்தாருக்கு தெரியாது

முதியவரை கொலை செய்த மஸ்தான் அதன்பிறகு ஊருக்கு சென்று, சென்னையில் போதிய வேலை இல்லை. அதனால், ஊருக்கு வந்து விட்டேன் எனக்கூறி தனது குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார். போலீசார் சென்று அவனை கைது செய்யும்போது மட்டுமே அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

* ஆதாரம் அழிப்பு

முதியவர் உயிரிழந்த உடன் அவரின் செல்போனை முதல் மாடிக்கு கொண்டு சென்ற மஸ்தான் அதனை யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக கூர்மையான ஆயுதத்தை வைத்து, அதை சுக்கு நூறாக உடைத்து அங்கே போட்விட்டு சென்றுள்ளார். செல்போனில் மஸ்தான் உடன் கடந்த 2 நாட்களாக பன்னீர்செல்வம் பேசியதால். அதனை வைத்து போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்று எண்ணி இதுபோன்று அவர் செய்துள்ளார்.

* கோடீஸ்வரனின் பரிதாப நிலை

உயிரிழந்த பன்னீர்செல்வத்திற்கு வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட இடங்களில் 4 வீடுகள் உள்ளன. குறைந்தபட்சம் அந்த வீடுகளின் மதிப்பு பல கோடி ரூபாய் போகும். ஆனால், கொத்தனாருக்கு வெறும் ரூ.3 ஆயிரம் தர முடியாது என்று கூறியதால் அவரது உயிர் பரிபோனது.

Related Stories: