பள்ளியாடி கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் அரிவாள்களுடன் கைது

கருங்கல் : கருங்கல் அருகே முள்ளங்கினாவிளையை சேர்ந்தவர் ஆட்லின் பிரிஜோ (26). இவரை கஞ்சா போதை கும்பலை சேர்ந்த அஸ்லின் (27) மற்றும் சிலர் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்தினர். இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்லினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதைத்தொடர்ந்து இதே கும்பல் பள்ளியாடி அருகே சிறிய பண்டாரவிளை பகுதி வழியாக வந்த ஆட்டோ டிரைவர் கார்த்திகேயன் (24), அஜின் (33), மற்றொரு அஜின் (32), ஜாபர் ஜியோ (23) ஆகிய 4 பேரை கத்தியால் குத்தினர். அடுத்தடுத்த நடந்த இந்த கத்திக்குத்து சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.

இதுகுறித்து கார்த்திகேயன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் டிஎஸ்பி நல்லசிவம் உத்தரவின்பேரில் போலீசார் பள்ளியாடி முருங்கவிளையை சேர்ந்த செர்ஜின் (20), செர்வின் (22) உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்தநிலையில் கத்திக்குத்து சம்பவங்கள் குறித்து அறிந்த எஸ்.பி. ஸ்டாலின் குற்ற செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்பிரிவு போலீசாரும் கஞ்சா போதை கும்பலை தேடி வந்தனர்.

இதற்கிடையே பள்ளியாடி பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அதே பகுதியில் பதுங்கி இருப்பதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பள்ளியாடியில் பதுங்கி இருந்த அண்ணன், தம்பிகளான செர்வின் (22), செர்ஜின் (20) ஆகிய 2 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 5 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா போதையில் ரவுடிசம் செய்து வந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories: