சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து, விமானங்களில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.23 கோடி மதிப்புடைய, ரூ.23 கிலோ ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேர் கைது செய்யப்பட்டனர். தாய்லாந்து நாட்டிலிருந்து பெருமளவு உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா விமானங்களில், சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்படுவதாகவும், அந்த கடத்தலில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஈடுபட்டு இருப்பதாகவும், சென்னை விமான நிலைய சுங்க துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், தனிப்படை அமைத்து, சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள், ஒரு குழுவாக தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாக சென்று, அடுத்த நாளே, தாய்லாந்தில் இருந்து இந்த விமானத்தில், சென்னைக்கு திரும்பி வந்துள்ளனர்.
அந்த கேரள இளைஞர்கள் மீது, ஏர் இன்டெலிஜெண்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதை அடுத்து அவர்கள் 4 பேரையும், சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அவர்கள் உடமைகளை பரிசோதித்தனர். அப்போது அவர்கள் உடமைகளுக்குள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் பாக்கெட்டுகள், மற்றும் சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவைகளை திறந்து பார்த்து சோதித்த போது, மொத்தம் 15 கிலோ எடையுடைய உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 15 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் 4 பேரையும் கைது செய்து, ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, மற்றொரு பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் கண்காணித்த போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள், சுற்றுலா பயணிகளாக தாய்லாந்து நாட்டிற்கு, கேரளாவில் இருந்து சென்று விட்டு, மறுநாளே அங்கிருந்து மற்றொரு விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்துள்ளது தெரிய வந்தது. இதை அடுத்து அவர்கள் இரண்டு பேரையும், சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று உடைமைகளை சோதித்தனர்.
அவர்கள் உடைமைகளில் பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட் இருந்தன. அவைகளை திறந்து பார்த்த போது, உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் உடமைகளில் 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை, சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 8 கோடி. இதை அடுத்து 2 பேரையும் கைது செய்த சுங்க அதிகாரிகள், ஹைட்ரோபோனிக் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.23 கோடி மதிப்புடைய, 23 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 6 கேரள மாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 6 பேரும், சர்வதேச போதை கடத்தும் கும்பலுக்கு, கடத்தல் குருவிகளாக செயல்படுகின்றனர் என்று தெரிய வந்தது. மேலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேரும் பட்டதாரிகள். இவர்களில் சிலர் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் படிப்பு படித்தவர்கள். இவர்கள் படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததாலும், சாதாரண வேலைகள் பார்த்தால், குறைந்த அளவு வருமானமே கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு, ஆடம்பரமாக, வசதியாக வாழ்க்கை நடத்த முடியாது என்பதால், குறுக்கு வழியில், அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இதைப்போல் கடத்தல் குருவிகளாக செயல்பட்டதாக தெரிய வந்துள்ளது.
அதோடு இந்த 6 கடத்தல் குருவிகளில், ஓரிருவர் தவிர மற்றவர்கள், கடத்தல் தொழிலுக்கு புது முகங்கள் என்றும் தெரியவந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில், அடுத்தடுத்து 2 விமானங்களில், ரூ. 23 கோடி மதிப்புடைய 23 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
