துணிக்கு அளவு எடுப்பது போன்று சேட்டை; அக்கா, தங்கைக்கு பாலியல் சீண்டல்: 73 வயது முதியவரான டெய்லர் போக்சோவில் கைது

 

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சுமதி (27, பெயர் மாற்றம்). இவருக்கு 10. 8 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளன. இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4 மற்றும் 2ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த 2 குழந்தைகளுக்கும் துணி தைப்பதற்காக வீட்டின் அருகே இருந்த டெய்லர் கடைக்கு தாய் அனுப்பி வைத்துள்ளார். அப்போது அங்கிருந்த டெய்லர், அளவு எடுப்பதாக கூறி குழந்தைகளை தவறான முறையில் தொட்டுள்ளார். அப்போது அருகில் உள்ளவர்கள் பார்த்து, குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுபற்றி சுமதியிடமும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி, குழந்தைகளிடம் விசாரித்துள்ளார். அப்போது, டெய்லர், எங்களிடம் 100 ரூபாய் கொடுத்து பள்ளியில் ஐஸ்கிரீம் வாங்கி கொள்ளுங்கள்’ என கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதை யாரிடமும் சொல்லக்கூடாது’ என்றும் மிரட்டினார் என்று கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுமதி, கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி கொருக்குப்பேட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (73) என்பவரை பிடித்து நேற்று விசாரித்தனர்.

இதில், கடந்த 20 வருடங்களுக்கு முன்பே இவரது மனைவி மற்றும் மகள் பிரிந்து சென்று விட்டதாகவும் பன்னீர்செல்வம் தனது தம்பி மனோகர் வீட்டில் தங்கி வருவதாகவும் மனோகருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் டெய்லர் கடைக்கு செல்ல முடியவில்லை. அதனால் பன்னீர்செல்வம் அந்த டெய்லர் கடையை நிர்வாகித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பன்னீர்செல்வத்தை எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: