நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத உரிமையாளர்களுக்கு ஜப்தி நோட்டீஸ்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் ஆண்டுக்கு 2 முறை சொத்துவரி செலுத்த வேண்டும். 12 லட்சம் பேர் சொத்துவரி செலுத்தி வரும் நிலையில் ஒரு சிலர் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். ரூ.5, 10, 20, 25 லட்சம் என பெருந்தொகை செலுத்தாமல் இருந்து வருவதால் அவர்களிடம் சொத்து வரியை வசூலிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு 40 பேர் இதுபோன்று சொத்துவரி செலுத்தாமல் இழுத்தடித்து வருவதால் அவர்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்கள் மற்றும் அவர்களது வீட்டின் முன்பு சொத்து வரி செலுத்த வேண்டிய தொகை குறிப்பிடப்பட்டு விளம்பர பலகையும் வைக்கப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிப்பதில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத உரிமையாளர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்ப வருவாய் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் செலுத்த வேண்டிய தொகைக்கு நிகராக வீட்டில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கூறும்போது, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில் வரி, தொழில் உரிமம் போன்றவற்றை முறையாக செலுத்தாதவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள், சிறிய கடைகள் பூட்டி சீல் வைக்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் இருக்கும் பெருந்தொகையை வசூலிக்க ஜப்தி நோட்டீஸ் விரைவில் வழங்கப்படும். அதற்குள் செலுத்தி விட்டால் ஜப்தி நடவடிக்கை தவிர்க்கப்படும். இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என்றனர்.

Related Stories: