கால்பந்து மன்னன் பீலே உடல் இன்று அடக்கம்; இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி

சான்டோஸ்: கால்பந்து வீரர் பீலேவின் உடல், இன்று பிரேசிலின்   சான்டோஸ் நகரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக சான்டோசில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கால்பந்து விளையாட்டின் பிதாமகன் என்று போற்றப்படும்  பிரேசில் வீரர் பீலே, கடந்த டிச.29ம் தேதி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவரது உடல் சான்டோஸ் நகரில் உள்ள பெல்மிரா ஸ்டேடியத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக நேற்று முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் இருந்து சான்டோஸ் நகருக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, பீலேவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவையொட்டி, பிரேசிலில் 3 நாள் துக்கம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று நண்பகல் பீலேவின் உடல், சான்டோசில் உள்ள நெக்ரோபால் கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இறுதி ஊர்வலத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இருப்பினும் கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது, அவரது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே கால்பந்து விளையாடும் அனைத்து நாடுகளும், பீலேவின் சாதனையை போற்றும் வகையில், தங்கள் நாட்டில் உள்ள ஏதாவது ஒரு ஸ்டேடியத்திற்கு பீலேவின் பெயரை சூட்ட வேண்டும் என்று சர்வதேச கால்பந்து கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories: