வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருக்கோஷ்டியூரில் சொர்க்கவாசல் திறப்பு: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில், கடந்த டிச. 23ம் தேதி பகல் பத்து உற்சவம் துவங்கியது. தினந்தோறும் காலையில் பெருமாள் மேல் சன்னதியில் இருந்து புறப்பாடாகி ஆண்டாள் மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் மாலையில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, ஆண்டாள் சன்னதியில் இருந்து பிரியாவிடை பெற்று மேல் சன்னதிக்கு புறப்பாடாகி சென்றார். நேற்று முன்தினத்துடன் பகல் பத்து நிகழ்ச்சி நிறைவடைந்தது.

வைகுண்ட ஏகாதசியான நேற்று காலையில் பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி சயன திருக்கோலத்தில் காட்சியளித்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்த அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். பின்னர் பெருமாள் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து பெருமாள் மூலவர் சன்னதியில் இருந்து புறப்பாடாகி தாயார் சன்னதியில் எழுந்தருளினார். அங்கு தாயாருக்கு தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிலாமரம் பிரகாரம் வந்து கண்ணாடி சேவை நடைபெற்றது. பின்னர் வேதவிண்ணப்பம் வாசித்தல் நடைபெற்றது. பின்னர் ஆண்டாளுக்கு தீபாராதனை நடந்தது.

இதனையடுத்து நேற்று இரவு 10 மணியளவில் பெருமாள் தேவி, பூமாதேவியருடன் எழுந்தருள சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பெருமாள் நம்மாழ்வார்க்கும், பக்தர்களுக்கும் அருள் பாலித்தார். தொடர்ந்து ஏகாதசி மண்டபம் சென்று பத்தி உலாத்துதல் நடைபெற்றது. பின்னர் மங்களாசனம் முடிந்து தென்னைமரத்து வீதி புறப்பாடு நடைபெற்று கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்பாள் சன்னதியில் பெருமாள், தேவி, பூமா தேவியருடன் எழுந்தருளி காப்புக்கட்டப்பட்டு ராப்பத்து உற்சவம் துவங்கியது. இந்த உற்சவத்தில் தினமும் மாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

தொடர்ந்து தென்னமர வீதி வழியாக புறப்பாடாகி தாயார் சந்நதியில் எழுந்தருளல் நடைபெறும். 12ம் தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை சிவகங்கை ராணி மதுராந்தக நாச்சியார் உத்தரவின்படி, மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories: