பக்ரைனில் இருந்து வந்த விமானத்தில் நடுவானில் தஞ்சை பயணி நெஞ்சு வலியால் பலி

மீனம்பாக்கம்: பக்ரைன் விமானம் சென்னை அருகே நடுவானில் பறந்தபோது, தஞ்சையை சேர்ந்த பயணி நெஞ்சு வலியால் பலியானார். இதைத் தொடர்ந்து, அந்த விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது (66).

இவர், மெக்காவுக்கு புனித பயணம் சென்றுவிட்டு, தனது குழுவினருடன் இன்று அதிகாலை கல்ஃப் ஏர்வேஸ் விமானம் மூலமாக சென்னை திரும்பி கொண்டிருந்தார். இந்த விமானம் சென்னை அருகே பறந்தபோது, நடுவானில் ராஜா முகமதுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு விமான பணிப்பெண்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து விமானிக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். மேலும், தனது விமானம் தரையிறங்க முன்னுரிமை வழங்க வலியுறுத்தினார். அதன்படி, இன்று அதிகாலை 3.15 மணியளவில் கல்ஃப் ஏர்வேஸ் விமானம் சென்னையில் தரையிறங்கியது. அங்கு தயார்நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், விமானத்தில் ஏறி ராஜா முகமதுவை பரிசோதித்தனர். இதில், அவர் ஏற்கெனவே மயங்கிய நிலையில் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராஜா முகமது மாரடைப்பினால் உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்தனர். அங்கு ராஜா முகமதுவின் சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையே, சென்னை வந்த கல்ஃப் விமானம், இன்று அதிகாலை 4.10 மணியளவில் மீண்டும் பக்ரைன் புறப்பட வேண்டும். இதில் செல்ல வேண்டிய பயணிகள் தயார்நிலையில் இருந்தனர்.

எனினும், இந்த விமானம் நடுவானில் பறந்தபோது பயணி ராஜா முகமது மாரடைப்பினால் பலியானதால், அதை சுத்தப்படுத்திய பிறகுதான் மீண்டும் இயக்க முடியும் என விமானி அறிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து, அந்த விமானத்தை ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அந்த விமானம் 192 பயணிகளுடன் இன்று காலை 6.40 மணியளவில் பக்ரைனுக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Related Stories: